அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அ.தி.மு.க. ஆட்சியில் வருமுன் காப்போம் திட்டம் நிறுத்தம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அ.தி.மு.க. ஆட்சியில் வருமுன் காப்போம் திட்டம் நிறுத்தப்பட்டதாக வாழப்பாடியில் நடந்த விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றம்சாட்டினார்.

Update: 2021-09-29 21:04 GMT
சேலம்
வருமுன் காப்போம் திட்டம்
சேலம் மாவட்டம் வாழப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் தொடக்க விழா  நடைபெற்றது. விழாவில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
சேலத்தை சேர்ந்த ஜனனி என்ற 14 வயது சிறுமி தனது 2 சிறுநீரகமும் செயலிழந்து விட்டதாகவும், அதற்கு முதல்-அமைச்சர் உதவி புரிய வேண்டும் என்றும் சமூக வலைத்தளத்தில் கோரிக்கை விடுத்தார். அதை ஏற்று முதல்-அமைச்சர் உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். 
தற்போது அந்த சிறுமி சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அவரது உடல் நலம் குறித்து முதல்-அமைச்சர் நேரில் சென்று விசாரித்துள்ளார். அந்த அளவுக்கு தாய் உள்ளத்தோடு அவர் செயல்பட்டு மக்களின் முதல்-அமைச்சராக திகழ்கிறார்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி
கடந்த 2006-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அ.தி.மு.க. ஆட்சியில் இந்த திட்டத்தை நிறுத்தி வைத்தார்கள். ஆனால் தற்போது அந்த திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் கிராமம், நகரம் என மொத்தம் ஆண்டுக்கு 1,250 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்.
இந்த முகாம்களில் பன்முனை மருத்துவ பரிசோதனை, கண், பல், காது-மூக்கு- தொண்டை, வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், காசநோய், மூட்டு மற்றும் எலும்பு சம்பந்தமான நோய்கள், இதய நோய்கள், சிறுநீரக கோளாறு, குழந்தை நல சிறப்பு மருத்துவம், மனநல மருத்துவம், கர்ப்பிணிகள் மற்றும் பெண்களுக்கான சிறப்பு மருத்துவம் மற்றும் புற்றுநோய் மருத்துவம் போன்ற 17 பிரிவுகளில் சிகிச்சைகள் அளிக்கப்படும்.
ஒவ்வொரு மாதமும், வருமுன் காப்போம் மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டிய இடங்களை தேர்வு செய்து, எந்தெந்த நாட்களில், எந்தெந்த மருத்துவக்குழு, எந்தெந்த இடங்களுக்கு செல்ல வேண்டும் என்பதை முன்கூட்டியே முடிவு செய்து முகாம்கள் நடத்தப்படும். போக்குவரத்து வசதி அதிகமில்லாத இடங்களிலும் முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு முகாமின் போதும் நல்வாழ்வு பற்றிய கண்காட்சி, கிராமப்புற மக்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும்.
அடையாள அட்டைகள்
மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் முகாமிலேயே சிகிச்சையும், இலவசமாக மருந்துகளும் வழங்கப்படும். தொடர் சிகிச்சை தேவைப்பட்டால், நோயின் தன்மையை பொறுத்து எந்த மருத்துவமனைக்கு சிகிச்சை பெற செல்ல வேண்டும் என்ற விவரங்களுடன் அடையாள அட்டைகள் வழங்கப்படும். தொடர் சிகிச்சை பெற வேண்டியவர்களுக்கு தேவைப்படும் விவரங்கள்அனைத்தும் மாவட்ட அளவில் முகாம் வாரியாக கணினியில் பதியப்பட்டு, தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு மா.சுப்பிரமணியன் பேசினார்.

மேலும் செய்திகள்