பூ மார்க்கெட்டில் கூட்டநெரிசலை கட்டுப்படுத்த இரும்பு தடுப்புகள் அமைப்பு

மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த இரும்பால் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.;

Update: 2021-09-29 20:20 GMT
மதுரை
மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த இரும்பால் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
பூ மார்க்கெட்
மதுரை மாவட்டத்தை பொறுத்தவரையில் எலியார்பத்தி, பாரப்பத்தி, வலையன்குளம், குசவன்குண்டு, திருமங்கலம், சோழவந்தான், அலங்காநல்லூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து மல்லிகைப்பூக்கள் டன் கணக்கில் மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இதற்கிடையே, மதுரை பூ மார்க்கெட்டில் போதிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என கூறி கடந்த ஆகஸ்டு மாதம் முதல் தற்காலிகமாக, மதுரை மாட்டுத்தாவணி ஆம்னி பஸ் நிலையத்தில் மார்க்கெட் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது.
அதன்படி, கடந்த 50 நாட்களாக ஆம்னி பஸ் நிலையத்தில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இதற்கிடையே, அங்கு போதிய வசதி இல்லாத நிலையில் மீண்டும் பழைய இடத்திற்கு மார்க்கெட் செயல்பட அனுமதிக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். விரைவில் அனுமதி அளிக்கப்படும் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இரும்பு தடுப்புகள்
இந்த நிலையில் பூ மார்க்கெட் இருந்த பழைய இடத்தில் கடைகளை திறக்கும் பணிகளை மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, மக்கள் கூட்டம் மற்றும் வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக மாட்டுத்தாவணி மார்க்கெட் வளாக பகுதியில் இரும்பு கம்பிகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதன் மூலம் வாகனங்கள் மார்க்கெட் கடைகள் இருக்கும் பகுதிக்குள் வராமல் தடுக்க முடியும். இதன் மூலம் வாகன நெரிசல் கட்டுப்படுத்தப்படும். கொரோனா சமூக இடைவெளியும் கடைபிடிக்க வசதியாக இருக்கும்.
இதுகுறித்து வியபாரிகள் சிலர் கூறுகையில், "மதுரை பூ மார்க்கெட்டில் அதிக அளவில் கடைகள் உள்ளதால் நெரிசல் ஏற்படுவதால் அதனை கட்டுப்படுத்த தற்போது தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. விழாக்காலங்களில் ஆம்னி பஸ் நிலையத்தில் கூட்டம் அதிகமாக கூடுவதால் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடிப்பதில் சிக்கல்கள் உள்ளது. எனவே, பழைய இடத்தில் உள்ள கடைகளை விரைந்து திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது பூ வியாபாரிகளின் வாழ்வாதாரம் மேம்படும்" என்றனர்.

மேலும் செய்திகள்