அரசின் திட்டங்கள் மக்களுக்கு கிடைக்க தி.மு.க. கூட்டணிக்கு வாக்களியுங்கள்- கனிமொழி எம்.பி. பேச்சு
அரசின் திட்டங்கள் மக்களுக்கு கிடைக்க தி.மு.க. கூட்டணிக்கு வாக்களியுங்கள் என கனிமொழி எம்.பி. பேசினார்.
வாசுதேவநல்லூர்:
அரசின் திட்டங்கள் மக்களுக்கு கிடைக்க தி.மு.க. கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று கனிமொழி எம்.பி. பேசினார்.
வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்
வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறவிருக்கும் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட கவுன்சிலர் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் வாசுதேவநல்லூரில் நடந்தது.
தி.மு.க. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லத்துரை தலைமை தாங்கினார். மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி., கால்நடை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, தனுஷ் குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் டாக்டர் சதன் திருமலைக்குமார், தங்கபாண்டியன், சண்முகையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கருணாநிதி வழியில்...
கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-
உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசுக்கும், மக்களுக்கும் இடையே பாலமாக இருக்க கூடியவர்கள். தமிழகத்தில் நடக்கும் தி.மு.க. ஆட்சி நாடு முழுவதும் பல்வேறு தலைவர்கள் பாராட்டக்கூடிய ஆட்சியாக உள்ளது. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார்.
பெண்கள் திருமணத்துக்கு நிதியுதவி வழங்கியவர் மறைந்த தலைவர் மு.கருணாநிதி. பெண்களுக்கு சுய உதவிக்குழுக்களை உருவாக்கியவரும் அவர் தான். இலவச சமையல் அடுப்பும் வழங்கினார். தற்போது கருணாநிதி வழியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்.
தி.மு.க. கூட்டணிக்கு
ஆட்சிக்கு வந்த 4 மாதத்துக்குள் ஆலங்குளத்தில் அரசு கலைக்கல்லூரிக்கு ரூ.11 கோடி ஒதுக்கியது தி.மு.க. அரசு. கடையம் பகுதியில் அறநிலையத்துறை சார்பில் ஒரு கல்லூரி அமைக்க ரூ.14 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மக்களின் தேவைகள் எல்லாவற்றையும் தி.மு.க. அரசு நிறைவேற்றி வருகிறது.
அரசின் திட்டங்களை மக்களிடம் சேர்ப்பவர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள். அரசின் திட்டங்கள் தடையின்றி மக்களுக்கு கிடைக்க தி.மு.க. கூட்டணிக்கு வாக்களியுங்கள். தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிக்கு நிர்வாகிகள் படுபட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சங்கரன்கோவில்
தென்காசி தெற்கு மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் ஊரக உள்ளாட்சி தேர்தல் தி.மு.க. வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் ெரயில்வே பீடர் சாலையில் உள்ள ஏ.ஆர்.பி. மகாலில் நடந்தது. கூட்டத்திற்கு தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன் தலைமை தாங்கினார். கனிமொழி எம்.பி. கலந்துகொண்டு வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசினார். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் சங்கரன்கோவில் வக்கீல் ராஜா, தென்காசி பழனி நாடார் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.