புள்ளி மான், காட்டுப்பன்றியை வேட்டையாடி கொன்ற 3 பேர் கைது

சிவகிரி அருகே புள்ளி மான், காட்டுப்பன்றியை வேட்டையாடி கொன்ற 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

Update: 2021-09-29 20:05 GMT
சிவகிரி:
சிவகிரி அருகே நாட்டு வெடிகுண்டு வைத்து புள்ளி மான்கள், காட்டுப்பன்றியை வேட்டையாடி கொன்றதாக 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

வனத்துறையினர் ரோந்து

சிவகிரி பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரமான வனப்பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடி மாமிசங்களை கடத்திச் செல்வதாக மாவட்ட வன அலுவலர் முருகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து மாவட்ட வன அலுவலர் முருகன் உத்தரவின்பேரில் உதவி வன பாதுகாவலர் ஷாநவாஸ் கான் அறிவுரையின் பேரில் சிவகிரி வனச்சரகர் (ரேஞ்சர்) சுரேஷ் தலைமையில் சிவகிரி தெற்கு பிரிவு வனவர் அஜித்குமார், வனக்காப்பாளர் இம்மானுவேல், சுதாகர், பெருமாள், வனக்காவலர் செல்வராஜ், மணிகண்டன், வேட்டைத்தடுப்பு காவலர்கள் பாலசுப்பிரமணியன், லோகநாதன், மாரியப்பன், ஆனந்த், சரவணன், ஆகியோர் அடங்கிய குழுவினர் சிவகிரிக்கு மேற்கே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரமான கருப்பசாமி கோவில் பீட் ராஜசிங்கப்பேரி கண்மாய், மற்றும் பரம்பு, ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

3 பேர் கைது

அப்போது விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகா சுந்தரராஜபுரம் மேல தெருவைச் சேர்ந்த அன்பழகன் மகன் மதன்ராஜ் (வயது 23), அதே ஊரைச் சேர்ந்த காசிராமன் மகன் மகேஷ் (19), சுந்தரராஜபுரம் இந்திரா நகரைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் குருவைய்யா (32), செல்லபாண்டி மகன் அன்பழகன் (32), கனியராஜ் மகன் விஜயராஜா, காசிராமன் (48), சிவகிரி அருகே விசுவநாதப்பேரியைச் சேர்ந்த முருகேசன் (56) ஆகிய 7 பேரும் சேர்ந்து ராஜசிங்கப்பேரி கண்மாயில் நாட்டு வெடிகுண்டு வைத்து 3 புள்ளிமான் களையும், காட்டுப்பன்றியையும் வேட்டையாடி கொன்று விற்பனை செய்வதற்காக நான்கு சக்கர வாகனம் மற்றும் இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு வந்தனா்.
அப்போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர் மதன்ராஜ், மகேஷ், குருவைய்யா ஆகிய 3 பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர். இவர்களிடமிருந்து நான்கு சக்கர வாகனம், மற்றும் இருசக்கர வாகனம் மற்றும் புள்ளி மான்கள், காட்டுப்பன்றி மாமிசம், 3 செல்போன்கள், அரிவாள், 2 நாட்டு வெடிகுண்டு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

4 பேருக்கு வலைவீச்சு

பின்னர் 3 பேரையும் சிவகிரி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி பிரியங்கா விசாரணை நடத்தி 3 பேரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். பின்னர் அவர்கள் தென்காசி கிளை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். மேலும் தலைமறைவாக உள்ள அன்பழகன், விஜயராஜா, காசிராஜன், முருகேசன் ஆகியோரை வனத்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்