அரிவாள் பட்டறை உரிமையாளர் கைது

பத்தமடையில் அரிவாள் பட்டறை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2021-09-29 19:34 GMT
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கொலை சம்பவங்கள் நடைபெற்று வந்தது. இதை கட்டுப்படுத்த போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ரவுடிகள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு வருகிறார்கள். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நூற்றுக்கணக்கானோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் நெல்லைக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு வருகை தந்தார். அப்போது கொலை சம்பவங்களை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனைகள் வழங்கினார்.
இதையொட்டி கொலை சம்பவத்துக்கு பயன்படுத்தப்படும் அரிவாள் தயாரிப்பை கண்காணிக்க நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவிட்டார். மேலும் அரிவாள் பட்டறைகளுக்கு கட்டுப்பாடும் விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் பத்தமடையை சேர்ந்த சுடலை (வயது 55), என்பவர் அரிவாள் பட்டறையில் இருந்து கூலி படையினருக்கு அரிவாள்கள் தயார் செய்யப்பட்டு வழங்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் பத்தமடை பகுதியில் உள்ள பட்டறையில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு கூலி படையினருக்கு வழங்குவதற்காக தயார் செய்யப்பட இருந்த 5 அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பட்டறை உரிமையாளர் சுடலையை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்