பஸ் படிக்கட்டில் தொங்கி செல்லும் பள்ளி மாணவர்கள்
பூவந்தியில் இருந்து திருப்புவனத்திற்கு போதிய பஸ் வசதியில்லாததால் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான முறையில் மாணவர்கள் பயணம் செய்து வருகின்றனர். எனவே இந்த பகுதியில் கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டருக்கு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்புவனம்,
பூவந்தியில் இருந்து திருப்புவனத்திற்கு போதிய பஸ் வசதியில்லாததால் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான முறையில் மாணவர்கள் பயணம் செய்து வருகின்றனர். எனவே இந்த பகுதியில் கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டருக்கு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆபத்தான பயணம்
திருப்புவனத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். மேலூரில் இருந்து பூவந்தி வழியாக காலை 8 மணிக்கு அரசு டவுன் பஸ் ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. காலை நேரத்தில் இந்த டவுன் பஸ் இயக்கப்படுவதால் இந்த பஸ்சில் பல்வேறு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், வியாபாரிகள் பயணம் செய்கிறார்கள். பள்ளி செல்லும் மாணவ-மாணவிகளும் இந்த பஸ்சில் தான் செல்கின்றனர்.
ஏற்கனவே கூட்டத்துடன் வரும் இந்த அரசு டவுண் பஸ்சில் போதிய இடம் இல்லாததால் மாணவர்கள் இரு படிக்கட்டுகளிலும் முதுகில் புத்தக பைகளை தொங்கவிட்டபடி ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்தபடி மீண்டும் பள்ளிக்கு வரும் இந்த மாணவர்கள் தற்போது பஸ்சில் ஆபத்தான நிலையில் படிக்கட்டுகளில் பயணம் செய்வது மிகவும் வேதனையாக உள்ளது.
கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை
இதுகுறித்து மாணவர்கள் கூறும் போது, காலை நேரத்தில் இந்த ஒரே ஒரு டவுன் பஸ் மட்டுமே இந்த பகுதியில் இயக்கப்படுவதால் நாங்கள் இலவச பயணமாக இந்த பஸ்சில் மட்டும் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த பஸ்சை விட்டுவிட்டால் இங்கிருந்து இயக்கப்படும் ஷேர் ஆட்டோவில் நபர் ஒருவருக்கு ரூ.15 வரை கொடுத்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே இந்த வழித்தடத்தில் பள்ளி நேரத்தின் போது கூடுதல் டவுன் பஸ்சை இயக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தினமும் ஆபத்தான முறையில் தான் பயணம் செய்து வருகிறோம். தவறி விழுந்து விடுமோ என பயந்து கொண்டே பயணம் செய்கிறோம். ஷேர் ஆட்டோவில் பயணிக்க பணம் இல்லாததால் தான் எங்களை போன்ற ஏழை, எளிய மாணவர்கள் அரசு பஸ்சில் நம்பி பள்ளிக்கு சென்று வருகிறோம். எனவே கூடுதல் பஸ்களை இந்த வழித்தடத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.