கல்லூரி மாணவர் கொலை
கமுதி அருகே கல்லூரி மாணவர் படுகொலை செய்யப்பட்டார். காதல் விவகாரத்தில் இந்த கொலை நடந்ததா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கமுதி,
கமுதி அருகே கல்லூரி மாணவர் படுகொலை செய்யப்பட்டார். காதல் விவகாரத்தில் இந்த கொலை நடந்ததா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கல்லூரி மாணவர்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே நீராவி-கரிசல்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியசாமி. இவருடைய மகன் அஜித்குமார் (வயது 20). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.இந்த நிலையில் அஜித்குமார் நேற்று முன்தினம் இரவு கரிசல்குளத்தில் உள்ள சமுதாய கூடத்தில் தனியாக தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் மரக்கட்டையால் அவரது தலையில் தாக்கி விட்டு தப்பி ஓடியது.
இந்த நிலையில் நேற்று காலை அவரது நண்பர்கள் அங்கு சென்ற போது அஜித்குமார் தலையில் படுகாயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே கிராம மக்கள் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை மீட்டு கமுதி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சைக்கு பிறகு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து அஜித்குமாரின் தாயார் பரமேஸ்வரி அளித்த புகாரின் பேரில் கமுதி துணை சூப்பிரண்டு பிரசன்னா உத்தரவின்பேரில் கமுதி இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார், கொலை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
காதல் விவகாரமா?
கொலை செய்யப்பட்ட அஜித்குமாரின் தந்தை முனியசாமி மற்றொரு கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ளார். அந்த கொலை தொடர்பாக பழிக்கு பழியாக அஜித்குமார் கொலை செய்யப்பட்டாரா? அல்லது காதல் விவகாரத்தில் இந்த சம்பவம் நடந்ததா? என பல்வேறு ேகாணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அஜித்குமாரை கொலை செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.