மயிலாடுதுறையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
மயிலாடுதுறையில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் நகராட்சி சார்பில் ஆக்கிரமிப்புகள் போலீசார் பாதுகாப்புடன் அகற்றப்பட்டது.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறையில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் நகராட்சி சார்பில் ஆக்கிரமிப்புகள் போலீசார் பாதுகாப்புடன் அகற்றப்பட்டது.
ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி
மயிலாடுதுறை நகரில் வர்த்தக நிறுவனங்களின் ஆக்கிரமிப்புகளால் சாலைகள் குறுகளாக மாறி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தன. இதனால் மயிலாடுதுறை நகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் லலிதா ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார். அதன்பேரில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் நகராட்சி சார்பில் நேற்று சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது.
முன்னதாக கால்டெக்ஸ் பகுதி 4 ரோடு சந்திப்பில் பூம்புகார் சாலையில் இருந்து ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்கப்பட்டது. அப்போது கடைகளின் முன்பு சாலையில் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த கட்டுமானங்கள், இரும்புத்தகடு கொட்டகைகள், விளம்பர பலகைகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
போலீசார் பாதுகாப்புடன்
தொடர்ந்து சீர்காழி சாலை மற்றும் பெரியக்கடை வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இந்த பணி நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் தங்கராஜ், நகராட்சி ஆணையர் பாலு ஆகியோர் மேற்பார்வையில் போலீசார் பாதுகாப்புடன் நடந்தது. இன்றும்(வியாழக்கிழமை), நாளையும்(வெள்ளிக்கிழமை) மயிலாடுதுறை நகரில் பட்டமங்கலத்தெரு, காந்திஜி சாலை, கச்சேரி சாலை, டவுன் எக்ஸ்டென்ஷன் பகுதி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.