‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.
திண்டுக்கல்:
சேதமடைந்த குடிநீர் தொட்டி
வேடசந்தூர் தாலுகா இ.சித்தூரை அடுத்த நல்லமநாயக்கன்பட்டியில் உள்ள குடிநீர் தொட்டி சேதம் அடைந்து விட்டது. மேலும் குழாய் திருகு பழுதடைந்து விட்டதால் தினமும் குடிநீர் வீணாக செல்கிறது. அதை தடுத்து மக்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் தொட்டியை சரிசெய்ய வேண்டும். -ராதா, நல்லமநாயக்கன்பட்டி.
குப்பை குவியல்
நிலக்கோட்டை 8-வது வார்டில் தெரு முனையில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. அங்கு குவிந்து கிடக்கும் குப்பைகளில் இருந்து வெளியேறும் துர்நாற்றத்தால் மக்கள் நடமாட முடியவில்லை. குப்பைகள் கொட்டப்படுவதை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சூரியபிரகாஷ், நிலக்கோட்டை.
சாக்கடை கால்வாய் அடைப்பு
பழனி திரவுபதி காளியம்மன் பகுதியில் சாக்கடை கால்வாயில் மண், குப்பைகள் சேர்ந்து அடைப்பு ஏற்பட்டு விட்டது. இதனால் கழிவுநீர் சீராக செல்லாமல் ஆங்காங்கே தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சாலை சேதம் அடைந்து குண்டும், குழியுமாக மாறிவிட்டது. சாக்கடை கால்வாயை தூர்வாரி, சாலையை சீரமைக்க வேண்டும். -விஜய் மகேந்திரன், பழனி.
சுகாதார வளாகம் திறக்கப்படுமா?
திண்டுக்கல் அருகே பெரியபள்ளப்பட்டி ஏ.டி.காலனியில் மகளிர் சுகாதார வளாகம் உள்ளது. இது கடந்த சில மாதங்களாக பூட்டி கிடக்கிறது. இதனால் சுகாதார வளாகம் இருந்தும் பயன்படாமல் இருக்கிறது. இதனை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா? -செந்தில்குமார், பெரியபள்ளப்பட்டி.
தெருநாய்கள் தொல்லை
வேடசந்தூர் நேருஜிநகரில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து விட்டது. கூட்டம், கூட்டமாக நாய்கள் சுற்றித்திரிகின்றன. அதில் உடல்முழுவதும் புண்களோடு ஒருசில நாய்கள் சுற்றுகின்றன. இரவு நேரத்தில் மக்கள் தனியாக செல்ல முடியவில்லை. மேலும் சாலையின் குறுக்காக ஓடும் நாய்களால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கி கொள்கின்றனர். எனவே தெருநாய்கள் தொல்லையை ஒழிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கார்த்திகேயன், வேடசந்தூர்.
அணையை தூர்வார வேண்டும்
ஆத்தூர் தாலுகா பாளையங்கோட்டையை அடுத்த பிரவான்பட்டியின் தெற்கு பகுதியில் அணை உள்ளது. இந்த அணையை மழைக்காலத்துக்கு முன்பு தூர்வாரி மழைநீரை சேமித்தால் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -ரமேஷ்குமார், பிரவான்பட்டி.
குண்டும், குழியுமான சாலை
பெரியகுளத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் சாலை சேதம் அடைந்து விட்டது. சாலை முழுவதும் குண்டும், குழியுமாக காட்சி அளிப்பதால் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்குகிறது. இதனால் மாணவர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் சிரமப்படுகின்றனர். இந்த சாலையை சீரமைக்க வேண்டும். -ராமகிருஷ்ணன், பெரியகுளம்.
பொதுக்கழிப்பறை அவசியம்
கொடைக்கானல் ஒன்றியம் மங்களம்கொம்பு ஏ.டி.காலனியில் பொதுக்கழிப்பறை வசதி இல்லை. இதனால் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் நிலை இருக்கிறது. இது மழைக்காலத்தில் சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தி விடும். இதை தடுக்க பொதுக்கழிப்பறை கட்ட வேண்டும். -வேளாங்கன்னி, மங்களம்கொம்பு.