நீர்நிலைகளில் தவறி விழுபவர்களை மீட்பது குறித்த பாதுகாப்பு ஒத்திகை
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதையொட்டி நீர்நிலைகளில் தவறி விழுபவர்களை மீட்பது குறித்த பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி கலெக்டர் விசாகன் முன்னிலையில் நடந்தது.
திண்டுக்கல்:
வடகிழக்கு பருவமழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் (அக்டோபர்) இறுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையொட்டி பருவமழையால் ஏற்படும் சேதங்களை தடுக்க திண்டுக்கல் மாவட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு கட்டமாக மழைக்காலத்தில் நீர்நிலைகளில் தவறி விழுந்தவர்களை பாதுகாப்பாக மீட்பது தொடர்பான ஒத்திகை நிகழ்ச்சி திண்டுக்கல் கோட்டை குளத்தில் நேற்று நடந்தது.
துண்டு பிரசுரம்
இதற்கு கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், சப்-கலெக்டர் தினேஷ்குமார், மாவட்ட தீயணைப்பு அலுவலர் வெங்கடரமணன், தனி தாசில்தார் சந்தனமேரிகீதா, உதவி தீயணைப்பு அலுவலர் சுரேஷ்கண்ணன், நிலைய அலுவலர் மயில்ராஜூ உள்பட பலர் நிகழ்ச்சியில் கடந்துகொண்டனர்.
இதையடுத்து தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் கண்காட்சி நடந்தது. இதில் பேரிடர் காலங்களில் பொதுமக்களை பாதுகாப்பாக மீட்பதற்காக பயன்படுத்தும் சாதனங்கள், கருவிகள் மற்றும் உபகரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
இதனை கலெக்டர் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். அதைத்தொடர்ந்து பேரிடர் காலங்களில் பொதுமக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு கலெக்டர் வழங்கினார்.
பாதுகாப்பு ஒத்திகை
அதன் பின்னர் கலெக்டர் முன்னிலையில் நீர்நிலைகளில் தவறி விழுபவர்களை எவ்வாறு பாதுகாப்பாக மீட்க வேண்டும் என்பது தொடர்பான ஒத்திகை நிகழ்ச்சி தீயணைப்பு துறையினர் சார்பில் நடத்தப்பட்டது.
இதில் கோட்டைக்குளத்தில் ரப்பர் படகில் சென்று கொண்டிருந்தவர்கள் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் தவறி விழுந்து தத்தளிப்பது போன்றும், அவர்களை 2 மோட்டார் படகுகளில் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து பாதுகாப்பாக மீட்டு கரைக்கு கொண்டு வருவது போன்றும் தத்ரூபமாக நடித்து காட்டப்பட்டது.
மேலும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தவர்கள் கரைக்கு கொண்டு வரப்பட்டதும் உடனடியாக அவர்களுக்கு தேவையான முதலுதவி சிகிச்சை கொடுக்கப்பட்டு மருத்துவமனைக்கு விரைவாக அழைத்து செல்வது போன்றும் ஒத்திகை நடத்தப்பட்டது.
இதையடுத்து கலெக்டர் கூறுகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் சேதங்களை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது என்றார்.
--------------