காய்கறி தோட்டம் அமைக்காவிட்டால் நடவடிக்கை
அரசு பள்ளிகளில் காய்கறி தோட்டம் அமைக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு, அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.;
பொள்ளாச்சி
அரசு பள்ளிகளில் காய்கறி தோட்டம் அமைக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு, அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
ஆலோசனை கூட்டம்
பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய அலுவலகத்தில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆணையாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) ஸ்ரீதர் கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு) சந்தோஷம் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள், சத்துணவு அமைப்பாளர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் அதிகாரிகள் பேசும்போது கூறியதாவது:-
பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய பகுதிகளில் 69 அரசு பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் 7,061 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் 5,569 பேர் சத்துணவு சாப்பிடுகின்றனர். சுமார் 30 சதவீதம் பேர் சாப்பிடுவதில்லை. உணவு உண்ணும் மாணவ-மாணவிகளின் ஊட்டச்சத்து குறைபாடுகளை நீக்கி ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க வேண்டும். குறிப்பாக 9-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளை அதிக எண்ணிக்கையில் சத்துணவு சாப்பிட ஊக்கப்படுத்த வேண்டும். மேலும் உணவு சாப்பிடுவோரின் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை பரிசோதித்து உணவில் உள்ள சத்துக்கள் குறையாத வகையில் உணவு தயாரித்து வழங்க வேண்டும்.
அடிப்படை வசதிகள்
மேலும் சத்துணவு சாப்பிடுவோரின் ஆரோக்கியம் மேம்படுகிறதா? என்பதை தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். உலர் உணவு பொருட்கள் மற்றும் முட்டைகள் சரியான அளவில் வழங்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும். மேலும் அவற்றை அனைத்து பள்ளி நாட்களிலும் வழங்கவும், வழங்கப்படும் விவரங்களை அறிவிப்பு பலகையில் தவறாமல் குறிப்பிடவும் வேண்டும். உலர் உணவு பொருட்கள் வழங்கும்போது புகார்கள் எதுவும் இல்லாமல் அனைவருக்கும் வழங்க வேண்டும்.
காய்கறி தோட்டம் அனைத்து பள்ளிகளிலும் முழுமையாக பராமரிக்க வேண்டும். தோட்டத்தில் விளைவிக்கப்படும் காய்கறிகளை சத்துணவில் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். காய்கறி தோட்டம் அமைக்க போதிய இடம் இல்லாத பள்ளிகளில் மாடி தோட்டம் அமைக்க சம்பந்தபட்ட வட்டாரங்களில் உள்ள தோட்டக்கலைத்துறை அலுவலரை அணுக வேண்டும். பள்ளி சத்துணவு மையங்களில் அனைத்து மாணவ-மாணவிகளும் உணவு சாப்பிட ஏதுவாக அடிப்படை வசதிகள் மற்றும் சிறப்பான சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.
காய்கறி தோட்டம்
மாணவ-மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் மாதம் ஒரு முறை அவர்களுக்கு பிடித்தமான உணவுகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியர்கள், பெற்றோர்-ஆசிரியர் கழக உறுப்பினர்களை ஒருங்கிணைத்து பள்ளிகளில் கூட்டங்கள் நடத்தி சத்துணவு உண்ணும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். ஒரே மாதிரியான உணவாக இல்லாமல் சுவைகளில் மாற்றம் செய்து சிறந்த முறையில் வழங்க சத்துணவு பணியாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
சத்துணவு சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்கப்படுகிறதா? என தலைமை ஆசிரியர் கண்காணிக்க வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் அடுத்த மாதத்திற்குள் காய்கறி தோட்டம் அமைக்க வேண்டும். மேலும் வருகிற நவம்பர் மாதத்தில் காய்கறி தோட்டம் முறையாக பராமரிக்கப்படாத பள்ளிகள் கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.