சக பணியாளரை தாக்கிய நர்சுகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு அங்கன்வாடி பணியாளர்கள் தர்ணா

சக பணியாளரை தாக்கிய நர்சுகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு அங்கன்வாடி பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனா்.;

Update: 2021-09-29 16:22 GMT
பிரம்மதேசம், 

பிரம்மதேசம் அருகே  ஆலத்தூர் கிராமத்தில் உள்ள அரசு துணை ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 26-ந்தேதி கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அப்போது முகாமில் பங்கேற்ற 2 நர்சுகளுக்கும், அசபூர் அங்கன்வாடி மைய பணியாளர் ஒருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறில் ஈடுபட்டனர். 

இதில் அவர்கள் கைகளால் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.  அந்த சமயத்தில் அங்கிருந்த கிராம மக்கள் அவர்களை சமாதானம் செய்தனர்.


இதற்கிடையே, அங்கன்வாடி மைய பணியாளர் தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் பற்றி அறிந்த சக அங்கன்வாடி பணியாளர்கள் 60 பேர் நேற்று சிறுவாடி கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் சென்று, அதன் முன் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பின்னர் ஆரம்ப சுகாதார நிலைய  மருத்துவர் வரதராஜனிடம், சம்பந்தப்பட்ட நர்சுகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்