சிலிண்டர் வெடித்ததாக தகவல் பரவியதால் கர்ப்பிணிகள் அலறியடித்து ஓட்டம்
பழனி அரசு மருத்துவமனையின் பிரசவ வார்டில், நேற்று திடீரென புகை வெளியேறியது. சிலிண்டர் வெடித்ததாக தகவல் பரவியதால் கர்ப்பிணிகள் மற்றும் கைக்குழந்தையுடன் பெண்கள் அலறியடித்து ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பழனி:
திடீர் புகை
திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசு மருத்துவமனையில், 70 படுக்கைகள் கொண்ட பிரசவ வார்டு தனி கட்டிடத்தில் செயல்படுகிறது. இந்த வார்டில், கைக்குழந்தைகளுடன் பெண்கள் சிகிச்சையில் இருந்தனர். இதேபோல் கர்ப்பிணிகள் சிலர் சிகிச்சைக்காக அங்கு வந்திருந்தனர்.
இந்தநிலையில் நேற்று பிற்பகலில், இந்த வார்டில் இருந்து திடீரென புகை கிளம்பியது. இதனால் பிரசவ வார்டில் உள்ள ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து விட்டதாக தகவல் பரவியது.
எனவே பெண்கள், கர்ப்பிணிகள் அதிர்ச்சி அடைந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். ஒவ்வொருவரும் தங்களது பச்சிளங்குழந்தையை தூக்கியபடி வார்டில் இருந்து வெளியேறினர்.
கண்ணாடி கதவு உடைப்பு
ஒருவருக்கொருவர் முண்டியடித்து வெளியேற முயன்றனர். ஆனால் மருத்துவமனையின் பிரதான நுழைவு வாயில் பூட்டப்பட்டிருந்தது. இதனால் அருகே உள்ள கண்ணாடி கதவை உடைத்து,
அதன் வழியாக பச்சிளங்குழந்தைகளுடன் பெண்களும், கர்ப்பிணிகளும் வெளியேறினர்.
பின்னர் அவர்கள், மருத்துவமனை வளாகத்தில் திறந்தவெளியில் மரத்தடியில் அமர்ந்திருந்தனர். இதுபற்றி தகவல் அறிந்து மருத்துவமனையின் பிற வார்டுகளில் பணியில் இருந்த டாக்டர்களும் பிரசவ வார்டுக்கு விரைந்தனர்.
மின்சார பெட்டி பழுது
இதற்கிடையே புகை வெளியேறியதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்ததில், ஆக்சிஜன் சிலிண்டர் எதுவும் வெடிக்கவில்லை என்று தெரியவந்தது. பிரசவ வார்டில் உள்ள மின்சார பெட்டியில் இருந்து புகை வெளியேறி உள்ளது.
இதனையடுத்து மருத்துவமனை ஊழியர்கள், மெயின் சுவிட்சை அணைத்து மின்சார வினியோகத்தை நிறுத்தினர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து மின்சார வாரியத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் பிரசவ வார்டுக்கு வந்த ஊழியர்கள், மின்சார பெட்டியில் ஏற்பட்ட பழுதை சீரமைத்தனர். அதன்பிறகே பெண்கள், கர்ப்பிணிகள் நிம்மதி அடைந்தனர். மீண்டும் அவர்கள், பிரசவ வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
தலைமை மருத்துவர் பேட்டி
இதுகுறித்து அரசு தலைமை டாக்டர் உதயகுமார் கூறுகையில், பிரசவ வார்டில் உள்ள மின்சார பெட்டியில் ஏற்பட்ட பழுது காரணமாக புகை வெளியேறி இருக்கிறது. இனிவருங்காலத்தில், இதுபோன்று பழுது ஏற்படாத வகையில் அனைத்து மின்சார சாதனங்களும் சரியான முறையில் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
பழனி அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் புகை வெளியேறிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.