ஊட்டி, செப்.30-
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 24.4.2017-ந் தேதி காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார்.
மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டது. இதுதொடர்பாக சயான், மனோஜ், திபு, சதீசன், சம்சீர் அலி, பிஜின், சந்தோஷ் சாமி, மனோஜ்சாமி, ஜித்தின்ராய், உதயகுமார் ஆகிய 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
தனிப்படை போலீசார் ஊட்டி பழைய போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், கனகராஜ் நண்பர்கள், சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட கார் உரிமையாளர், இடைத்தரகர் உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் ஜாமீனில் உள்ள சம்சீர் அலி, சதீசன், பிஜின், மனோஜ்சாமி, சந்தோஷ்சாமி ஆகிய 5 பேரிடம் விசாரணை நடத்தி பதிவு செய்தனர்.
மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் சிலரிடம் நேரடியாக விசாரணை நடத்தி முக்கிய தகவல்களை பதிவு செய்தார். ஒரு மாதத்தில் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 5 பேர், அரசு தரப்பு சாட்சிகள், பிறரிடம் என 30-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கோடநாடு வழக்கு ஊட்டி கோர்ட்டில் வழக்கு நாளை (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வருகிறது.
இதனால் போலீசார் வழக்கு தொடர்பாக இதுவரை நடத்திய விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளது. இருப்பினும் திபு, ஜித்தின்ஜாய், உதயகுமார், வாளையார் மனோஜ் ஆகிய 4 பேரிடம் விசாரணை நடத்தப்பட வில்லை. இதனால் கூடுதல் கால அவகாசம் அரசு தரப்பில் கேட்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.