தூத்துக்குடியில் 8 மாத ஆண் குழந்தை ரூ.3 லட்சத்துக்கு விற்பனை தாய் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்கு
தூத்துக்குடியில் 8 மாத ஆண் குழந்தை ரூ.3 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. இதுதொடர்பாக குழந்தையின் தாய் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் 8 மாத ஆண் குழந்தை ரூ.3 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. இதுதொடர்பாக குழந்தையின் தாய் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கருத்து வேறுபாடு
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் மணிகண்டன் (வயது 38). இவருக்கும், தூத்துக்குடி கொத்தனார் காலனியை சேர்ந்த ஜெபமலர் (28) என்பவருக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடந்தது.
கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ஜெபமலருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதற்கிடையே, கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஜெபமலர் தனது கணவரை பிரிந்து குழந்தையுடன் தூத்துக்குடிக்கு வந்துவிட்டார்.
குழந்தை விற்பனை
கடந்த சில நாட்களுக்கு முன்பு மணிகண்டன் தனது மனைவி, குழந்தையை பார்ப்பதற்காக தூத்துக்குடிக்கு வந்தார். ஆனால், வீட்டில் குழந்தை இல்லை. ஜெபமலரிடம் கேட்டபோது சரியான பதில் கூறவில்லை.
இதற்கிடையே, ஜெபமலர் தனது குழந்தையை புரோக்கர் மூலம் விற்பனை செய்து விட்டதாக மணிகண்டனுக்கு தகவல் கிடைத்தது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் தூத்துக்குடி சிப்காட் போலீசில் புகார் செய்தார். அதில், ஜெபமலர், தனது குழந்தையை விருதுநகரைச் சேர்ந்த புேராக்கர் ஜேசுதாஸ் என்பவர் மூலம் தூத்துக்குடியைச் சேர்ந்த அந்தோணி, கிருபா, செல்வராஜ், டேனியல் ஆகியோருடன் சேர்ந்து ரூ.3 லட்சத்துக்கு விற்பனை செய்து விட்டதாகவும், எனது குழந்தையை மீட்டுத்தரக் கோரியும் தெரிவித்து இருந்தார்.
தாய் உள்பட 6 பேர் மீது வழக்கு
அதன்பேரில், நேற்று முன்தினம் தூத்துக்குடி சிப்காட் போலீசார், குழந்தையின் தாய் ஜெபமலர் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடியில் 8 மாத ஆண் குழந்தை ரூ.3 லட்சத்துக்கு விற்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.