சம்பள உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது
பனியன் தொழிலாளர்களுக்கு 32 சதவீத சம்பள உயர்வு ஒப்பந்தம் நேற்று சைமா சங்க அலுவலகத்தில் கையெழுத்தானது.
திருப்பூர்
பனியன் தொழிலாளர்களுக்கு 32 சதவீத சம்பள உயர்வு ஒப்பந்தம் நேற்று சைமா சங்க அலுவலகத்தில் கையெழுத்தானது.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு
திருப்பூரில் உள்ள பனியன் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் ஒப்பந்தப்படி வழங்கப்படுகிறது. பனியன் உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினர் சம்பள உயர்வு தொடர்பாக ஒப்பந்தம் போட்டு வருகிறார்கள். இந்நிலையில் கடந்த ஒப்பந்தம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முடிவடைந்த நிலையில் புதிய ஒப்பந்தம் போடுவதற்காக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதன்படி சைமா சங்க அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்த 8வது கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
தொழிற்சங்கத்தினர் தரப்பில் 90 சதவீத சம்பள உயர்வு கேட்டனர். உற்பத்தியாளர்கள் தரப்பில் 32 சதவீதம் சம்பள உயர்வு தருவதாக தெரிவித்தனர். இதில் இருதரப்பினருக்கும் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது. இந்நிலையில் நேற்று மதியம் இந்த ஒப்பந்தம் சைமா சங்க அலுவலகத்தில் கையெழுத்தானது.
32 சதவீத சம்பள உயர்வு
அதன்படி அனைத்து பனியன் தொழிலாளர்களுக்கும் பீஸ் ரேட் தொழிலாளர்கள் உள்பட நடைமுறை அடிப்படை சம்பளத்தில் இருந்து சம்பள உயர்வு வருமாறு:- கட்டிங், டெய்லரிங், அயர்ன், பேக்கிங், நிட்டிங் மெஷின் ஆகியோருக்கு தற்போது நடைமுறை அடிப்படை சம்பளம் ரூ.216.37 ஆக உள்ளது. தற்போதைய ஒப்பந்தப்படி 32 சதவீத சம்பள உயர்வு போடப்பட்டுள்ளது. அதன்படி முதல் வருடம் 19 சதவீதமும், 2-ம் ஆண்டு வரை 5 சதவீதமும், 3-ம் ஆண்டு வரை 4 சதவீதமும், 4-ம் ஆண்டு வரை 4 சதவீதமும் சம்பள உயர்வு வழங்கப்படுகிறது.
இதுபோல் செக்கிங் தொழிலாளர்களுக்கு ரூ.123.54 லேபிள் வைப்பவர்கள் ரூ.111.27, கைமடிப்பவர்கள் ரூ.108.24 டேமெஜ் பார்ப்பவர்கள் ரூ.86.48 அடுக்கி கட்டுதல் போன்ற உதவியாளர்கள் ரூ.61.95 பேப்ரிகேசன் ரூ.201.62 நடைமுறை சம்பளம் உள்ளது. இவர்களுக்கும் 32 சதவீதம் சம்பள உயர்வு வழங்கப்படுகிறது.
கையெழுத்தானது
இதுபோல் ரூ.25 பயணப்படி, விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ரூ.15 ஆயிரத்திற்கு 14.5 பைசா பஞ்சப்படி வழங்குவது உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் நேற்று இருதரப்பினர் முன்னிலையில் கையெழுத்தானது.