செல்போன் கடையில் திருடிய பாலிடெக்னிக் மாணவர் கைது

செல்போன் கடையில் திருடிய பாலிடெக்னிக் மாணவர் கைது

Update: 2021-09-28 21:48 GMT
பனமரத்துப்பட்டி, செப்.29-
மல்லூர் அருகே செல்போன் கடையின் மேற்கூரையை உடைத்து உள்ளே புகுந்து செல்போன்களை திருடிய பாலிடெக்னிக் மாணவரை போலீசார் கைது செய்தனர்.
செல்போன் கடையில் திருட்டு
நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகே உள்ள பருத்திப்பள்ளி கிராமம் கோட்டைகாடு பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது 30). இவர் ஆட்டையாம்பட்டியை அடுத்துள்ள பாலம்பட்டி பகுதியில் சொந்தமாக செல்போன் கடை நடத்தி வருகிறார். 
கடந்த 20-ந் தேதி மோகன் வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அடுத்த நாள் காலை மீண்டும் கடைக்கு வந்து பார்த்த போது, ஆஸ்பெஸ்டாஸ் சீட்டால் ஆன கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 28 ஆண்ட்ராய்டு செல்போன்கள், மடிக்கணினி மற்றும் ரூ.70 ஆயிரம் உள்பட ரூ.1 லட்சத்து 95 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருந்தனர். 
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மோகன் மல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சேலம் புறநகர் துணை போலீஸ் சூப்பிரண்டு தையல்நாயகி உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தலிங்கம் தலைமையிலான தனிப்படை போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடிவந்தனர். 
பாலிடெக்னிக் மாணவர் கைது
இந்த நிலையில் தனிப்படை போலீசார் நேற்று பாலம்பட்டி பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரிந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த வாலிபர் முன்னுக்கு பின் முரணாக பதிலை கூறியதால் போலீசார் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். 
அதில் அந்த வாலிபர் நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகே உள்ள பள்ளிப்பட்டி கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜா என்பவரது மகன் பாலமுருகன் (19) என்பதும், இவர் மல்லசமுத்திரம் பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ மூன்றாம் ஆண்டு படித்து வந்ததும் தெரியவந்தது. 
மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் மோகனின் செல்போன் கடையின் மேற்கூரையை உடைத்து பொருட்களை திருடியதும் தெரியவந்தது. உடனே போலீசார் பாலமுருகனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த ஆண்ட்ராய்டு செல்போன்கள், மடிக்கணினி உள்ளிட்டவற்றை போலீசார் மீட்டனர்.

மேலும் செய்திகள்