கல்லூரி மாணவி மீது திராவகம் வீசிய வழக்கில் ஆபரேட்டருக்கு 10 ஆண்டு சிறை கிருஷ்ணகிரி கோர்ட்டு தீர்ப்பு

கல்லூரி மாணவி மீது திராவகம் வீசிய வழக்கில் பொக்லைன் ஆபரேட்டருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2021-09-28 21:34 GMT
கிருஷ்ணகிரி:
கல்லூரி மாணவி மீது திராவகம் வீசிய வழக்கில்பொக்லைன் ஆபரேட்டருக்கு  10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
திராவகம் வீச்சு 
கிருஷ்ணகிரி அருகே உள்ள குப்பச்சிப்பாறையை சேர்ந்தவர் 18 வயது மாணவி. இவர் கடந்த 2016-ம் ஆண்டு கல்லூரியில் பி.எஸ்சி. படித்து வந்தார். கடந்த 13.7.2016 அன்று மாணவி வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர், மாணவி மீது திராவகத்தை (ஆசிட்) வீசி சென்றார். இதில் மாணவிக்கு முகம், கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அதில் அதே பகுதியை சேர்ந்த பொக்லைன் ஆபேரட்டர் வேடியப்பன் (வயது 40) என்பவர் கல்லூரி மாணவியை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி மாணவியின் பெற்றோரிடம் வற்புறுத்தியதும், அதற்கு மாணவியின் பெற்றோர் மறுத்ததால் ஆத்திரத்தில் திராவகத்தை வீசியதும் தெரிய வந்தது.
10 ஆண்டு சிறை தண்டனை 
இதைத் தொடர்ந்து வேடியப்பனை குருபரப்பள்ளி போலீசார் கைது செய்தனர். இவர் மீதான வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி லதா நேற்று தீர்ப்பு கூறினார். 
அதன்படி குற்றம் சாட்டப்பட்ட வேடியப்பன், வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த குற்றத்திற்காக 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும், பெண் மீது திராவகத்தை ஊற்றி காயம் ஏற்படுத்திய குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும், இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறினார்.

மேலும் செய்திகள்