தத்தாத்ரேயா கோவிலில் தொழுகை நடத்த அனுமதி: கர்நாடக அரசின் முல்லா நியமன உத்தரவு செல்லாது
சிக்கமகளூரு தத்தாத்ரேயா கோவிலில் தொழுகை நடத்த அனுமதித்து முல்லாவை நியமனம் செய்து கர்நாடக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லாது என்று கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.
பெங்களூரு: சிக்கமகளூரு தத்தாத்ரேயா கோவிலில் தொழுகை நடத்த அனுமதித்து முல்லாவை நியமனம் செய்து கர்நாடக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லாது என்று கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.
முல்லா நியமனம்
சிக்கமகளூருவில் பாபாபுடன்கிரி மலையில் தத்தாத்ரேயா கோவில் உள்ளது. அங்கு இந்து மற்றும் முஸ்லிம் மதத்தினர் பூஜை செய்கிறார்கள். அது இந்துக்களுக்கு சொந்தமானது என்று இந்துக்களும், முஸ்லிம்களுக்கு சொந்தமானது என்று முஸ்லிம்களும் உரிமை கொண்டாடுகிறார்கள். இதுதொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு, அந்த கோவில் யாருக்கு சொந்தம் என்பது குறித்து மாநில அரசு உரிய முடிவு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்த நிலையில் கர்நாடக ஐகோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி நாகமோகன்தாஸ் தலைமையிலான உயர்மட்ட குழு பரிந்துரைப்படி, தத்தாத்ரேயா கோவிலில் முஸ்லிம் முறைப்படி தொழுகை நடத்த முல்லாவை (முஜாவர்) நியமனம் செய்ய வேண்டும் என்று மாநில அரசுக்கு பரிந்துரை செய்தது. அதன்படி கடந்த 2018-ம் ஆண்டு அந்த கோவிலில் தொழுகை நடத்த முல்லாவை நியமனம் செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டது.
அரசு உத்தரவு செல்லாது
மாநில அரசின் உத்தரவை எதிர்த்து தத்தாத்ரேயா கோவில் மேம்பாட்டு குழு, கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. அந்த மனு மீது விசாரணை நடைபெற்று வந்தது. நீதிபதி தினேஷ்குமார் இந்த வழக்கின் தீர்ப்பை நேற்று அறிவித்தார். அதில் தத்தாத்ரேயா கோவிலில் தொழுகை நடத்த முல்லாவை நியமனம் செய்து கர்நாடக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லாது என்று தீர்ப்பில் கூறியுள்ளார்.