கொடூரமாக தாக்கி வைக்கோல் போருக்குள் வீசப்பட்ட பெண் குழந்தை மீட்பு

பெலகாவி அருகே கொடூரமாக தாக்கி வைக்கோல் போருக்குள் வீசப்பட்ட பெண் குழந்தை மீட்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் குழந்தையை தாக்கும் ஒரு வீடியோவும் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2021-09-28 21:16 GMT
பெங்களூரு: பெலகாவி அருகே கொடூரமாக தாக்கி வைக்கோல் போருக்குள் வீசப்பட்ட பெண் குழந்தை மீட்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் குழந்தையை தாக்கும் ஒரு வீடியோவும் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெண் குழந்தை மீட்பு

பெலகாவி மாவட்டம் அதானி தாலுகா அதர்நாலா கிராமத்தில் உள்ள ஒரு வைக்கோல் போருக்குள் பெண் குழந்தை அழுதபடி கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராமமக்கள் அந்த குழந்தையை மீட்டனர். குழந்தைக்கு 2 வயது இருக்கும். குழந்தையின் கை, கால், முகத்தில் சிகரெட்டால் சூடு போடப்பட்டு இருந்தது. உடலில் பல பகுதிகளில் காயங்களும் இருந்தது. இதுபற்றி அறிந்த அதானி போலீசார் விரைந்து வந்து அந்த பெண் குழந்தையை மீட்டனர்.

பின்னர் பெலகாவி அரசு ஆஸ்பத்திரியில் குழந்தையை அனுமதித்தனர். அந்த குழந்தையை தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். குழந்தையின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அந்த குழந்தையை கொடூரமாக தாக்கி வைக்கோல் போருக்குள் வீசிய மர்மநபர்கள் யார்? பெற்றோரே குழந்தையை வீசினார்களா? என்பது தெரியவில்லை.

வீடியோ வெளியானது

இதுகுறித்து அதானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தையை கொடூரமாக தாக்கி வைக்கோல் போருக்குள் வீசிய மர்மநபர்களை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், பெலகாவியில் ஒரு குழந்தையை தந்தை கொடூரமாக தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி, அது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில் இருக்கும் குழந்தை தான், வைக்கோல் போருக்குள் வீசப்பட்ட குழந்தையா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனை கண்டுபிடிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து, சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோ காட்சிகளையும், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் பெண் குழந்தையின் புகைப்படத்தையும் தடயவியல் ஆய்வுக்காக போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் பெலகாவியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்