கட்டிடம் இடிந்து விழுந்த விவகாரம்; தலைமறைவான வீட்டின் உரிமையாளரை பிடிக்க போலீஸ் தீவிரம்

பெங்களூருவில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விவகாரத்தில் தலைமறைவாகி விட்ட வீட்டின் உரிமையாளரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

Update: 2021-09-28 21:16 GMT
பெங்களூரு: பெங்களூருவில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விவகாரத்தில் தலைமறைவாகி விட்ட வீட்டின் உரிமையாளரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். 

3 மாடி வீடு இடிந்தது

பெங்களூரு வில்சன்கார்டன் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட லக்கசந்திராவில் சுரேஷ் என்பவருக்கு சொந்தமான பழமையான 3 மாடி வீடு இருந்தது. அந்த வீடு கடந்த 2 ஆண்டுக்கு முன்பாகவே ஒருபுறம் சரிந்தது. இதனால் அங்கு யாரும் வாடகைக்கு குடியிருக்க வரவில்லை. ஆனால் அப்பகுதியில் மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து வருவதால், அங்கு பணியாற்றும் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கி இருந்தனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் அந்த 3 மாடி வீடு இடிந்து விழுந்து தரை மட்டமானது. வீடு இடிந்து விழும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதுகுறித்து வில்சன்கார்டன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உரிமையாளரை பிடிக்க தீவிரம்

போலீஸ் விசாரணையில், சுரேசுக்கு சொந்தமான வீடு மிகவும் பழமையானது என்பதும், இடிந்து விழும் தருவாயில் இருந்ததால், அதனை இடித்து அகற்றும்படி மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டு இருந்தார்கள் என்பதும் தெரியவந்துள்ளது. ஆனால் மெட்ரோ ரெயில் தொழிலாளர்கள் அங்கு வாடகைக்கு வசித்ததால், வீடு இடிந்து விழும் நிலையில் இருந்தாலும், பணத்திற்கு ஆசைப்பட்டு சுரேஷ் வாடகைக்கு விட்டு இருந்தது தெரியவந்துள்ளது. வீடு இடிந்து விழும் சந்தர்ப்பத்தில் தொழிலாளர்கள் வேலைக்கு சென்றிருந்ததால், 50 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பித்து இருந்தார்கள்.

இல்லையெனில், பெருமளவு உயிர் சேதம் ஏற்பட்டு இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், வீடு இடிந்து விழுந்ததும் உரிமையாளர் சுரேஷ் தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவாகி விட்டார். அவரை கைது செய்ய வில்சன்கார்டன் போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். சுரேஷ் பற்றிய தகவல் கிடைத்திருப்பதாகவும், ஓரிரு நாட்களில் அவர் கைது செய்யப்படுவார் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்