சிவமொக்கா, தாவணகெரே பட்டு விவசாயிகளுக்கு போக்குவரத்து செலவு; அதிகாரிகளுக்கு மந்திரி நாராயணகவுடா உத்தரவு
சிவமொக்கா, தாவணகெரே பட்டு விவசாயிகளுக்கு போக்குவரத்து செலவு வழங்கும்படி அதிகாரிகளுக்கு மந்திரி நாராயணகவுடா உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூரு: சிவமொக்கா, தாவணகெரே பட்டு விவசாயிகளுக்கு போக்குவரத்து செலவு வழங்கும்படி அதிகாரிகளுக்கு மந்திரி நாராயணகவுடா உத்தரவிட்டுள்ளார்.
சந்தையில் விட வேண்டும்
விளையாட்டு, இளைஞர் நலன் மற்றும் பட்டு வளர்ச்சித்துறை மந்திரி நாராயணகவுடா, பெங்களூருவில் நேற்று தனது துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் அவர் பேசியதாவது:-
அதிக விலை கொடுத்து பட்டு சேலைகளை வாங்குவோருக்கு நல்ல தரமான பை அல்லது சூட்கேசில் போட்டு வழங்க வேண்டும். சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்த வேண்டும். மக்களை ஈர்க்கும் வகையிலான சந்தைகளை உருவாக்க வேண்டியது அவசியம். சந்தை வாய்ப்புடன் புதிய டிசைன்களில் பட்டு சேலைகளை வடிவமைத்து சந்தையில் விட வேண்டும்.
பட்டுநூல் எந்திரம்
மைசூருவில் பட்டுக்கு அதிக தேவை எழுந்துள்ளது. ஆனால் அதன் உற்பத்தி குறைந்த அளவில் தான் உள்ளது. பட்டு சேலை உற்பத்தி நிறுவனத்தில் அதன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இதற்காக 2 ஷிப்டு முறையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும். பட்டு சேலைகள் அனைத்து தரப்பினருக்கும் கிடைக்கும் வகையில் பல்வேறு டிசைன்களில் தயாரிக்க வேண்டும்.
ஹாசன், பெலகாவி, கலபுரகியில் பட்டுநூல் தயரிக்கும் எந்திரம் பயன்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அந்த எந்திரங்களை பராமரித்து, மைசூரு, கனகபுரா, சன்னபட்டணாவுக்கு கொண்டுவர வேண்டும். பெங்களூரு, டெல்லி விமான நிலையங்களில் பட்டு சேலை விற்பனை கடைகளை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போக்குவரத்து செலவு
மும்பையில் கன்னடர்கள் அதிகம் வசிக்கும் தாதர், மாடுங்கா பகுதியில் இந்த கடைகளை திறப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசிக்க வேண்டும். சிவமொக்கா, தாவணகெரே பகுதி விவசாயிகள் பட்டு கூடுகளை மார்க்கெட்டுக்கு கொண்டு வர போக்குவரத்து செலவு கிலோவுக்கு ரூ.10 வழங்கப்பட்டிருந்தது. அதை நிறுத்தியுள்ளனர். அந்த போக்குவரத்து செலவை மீண்டும் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு நாராயணகவுடா பேசினார்.