மைனர் பெண்ணை கற்பழித்து கர்ப்பமாக்கிவிட்டு கருக்கலைப்பு; போலீஸ்காரர் கைது
பலாத்காரத்துக்கு ஆளான மைனர் பெண்ணை கற்பழித்து கர்ப்பமாக்கியதுடன், கருவை கலைத்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மங்களூரு: பலாத்காரத்துக்கு ஆளான மைனர் பெண்ணை கற்பழித்து கர்ப்பமாக்கியதுடன், கருவை கலைத்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பலாத்காரம்
தட்சிண கன்னடா மாவட்டம் கடபா பகுதியில் 16 வயது மைனர் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மைனர் பெண்ணை, வாலிபர் ஒருவர் பலாத்காரம் செய்துள்ளார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மைனர் பெண், பெற்றோர் கடபா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மைனர் பெண்ணை பலாத்காரம் செய்த நபரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கை கடபா போலீஸ்காரரான சிவராஜ் என்பவர் விசாரணை நடத்தினார். ஆனால் பலாத்கார வழக்கு முடிந்த பின்னரும் விசாரணை என்ற பெயரில் போலீஸ்காரர் சிவராஜ் அடிக்கடி மைனர் பெண்ணின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். இதனால் போலீஸ்காரர் சிவராஜூக்கும், மைனர் பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
5½ மாதம் கர்ப்பம்
அதன்படி கடந்த 5 மாதங்களுக்கு முன்பு விசாரணை நடத்த போலீஸ்காரர் சிவராஜ், மைனர் பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார். அந்த சமயத்தில் வீட்டில் பெற்றோர் இல்லையென தெரிகிறது. அப்போது போலீஸ்காரர் சிவராஜ், மைனர் பெண்ணை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தைகள் கூறி கற்பழித்துள்ளார். இப்படியே தொடர்ந்து மைனர் பெண்ணை அவர் கற்பழித்து வந்துள்ளார்.
இதனால் மைனர் பெண் 5½ மாதம் கர்ப்பம் ஆனார். இதற்கிடையே பெற்றோர், மைனர் பெண்ணின் உடலில் ஏற்பட்ட வித்தியாசத்தை கண்டு அதுபற்றி கேட்டுள்ளனர். அப்போது மைனர் பெண், திருமணம் ஆசை வார்த்தைகள் கூறி போலீஸ்காரர் சிவராஜ் கற்பழித்ததாகவும், தற்போது 5½ மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் கதறி அழுதபடி கூறினார். இதைகேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
கருக்கலைப்பு
இதுபற்றி மைனர் பெண்ணின் பெற்றோர், சிவராஜை செல்போனில் தொடர்பு கொண்டு பேசி தங்களது மகளை திருமணம் செய்து கொள்ளும்படி கூறியுள்ளனர். ஆனால் போலீஸ்காரர் சிவராஜ், தன்னால் உங்களது மகளை திருமணம் செய்து கொள்ள முடியாது, கர்ப்பத்தை கலைத்துவிடும்படியும், செலவுக்கு பணம் அனுப்புகிறேன் என்றும் கூறியுள்ளார்.
அதன்படி சிவராஜ் கர்ப்பத்தை கலைக்க ரூ.35 ஆயிரம் ஆன்லைன் மூலம் அனுப்பியுள்ளார். அந்த பணத்தை எடுத்துக்கொண்டு மைனர் பெண்ணும், அவரது தாயும் தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அங்கு டாக்டர்கள், மைனர் பெண்ணின் கர்ப்பத்தை கலைத்து தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இதுபற்றி மைனர் பெண்ணின் தாயார், தனது கணவருக்கு செல்போனில் தகவல் கொடுத்தார். ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் மைனர் பெண்ணும், தாயும் வீடு வந்து சேரவில்லை.
போலீஸ்காரர் கைது
இதனால் மைனர் பெண்ணின் தந்தை, கடபா போலீசில் புகார் அளித்தார். அதில் தனது மகளை போலீஸ்காரர் சிவராஜ் கற்பழித்து கர்ப்பமாக்கினார். மேலும் கருக்கலைக்க பணமும் கொடுத்துள்ளார். கருவை கலைக்க ஆஸ்பத்திரிக்கு சென்ற எனது மனைவியும், மகளும் திரும்பி வரவில்லை. எனவே இதுகுறித்து விசாரணை நடத்தும்படி கூறியிருந்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் சம்பந்தப்பட்ட தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று மைனர் பெண், தாயை மீட்டனர். இதையடுத்து மைனர் பெண்னை கற்பழித்து கர்ப்பமாக்கியதுடன் கருக்கலைப்பு செய்த போலீஸ்காரர் தேவராைஜ கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போலீஸ் ஐ.ஜி. விசாரணை
இந்த நிலையில் நேற்று இந்த சம்பவம் தொடர்பாக கடப்பா போலீஸ் நிலையத்திற்கு மேற்கு மண்டல ஐ.ஜி. தேவஜோதி ராய் வந்து விசாரணை நடத்தி விவரங்களை கேட்டறிந்தார். இதனால் இந்த விவகாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.