வாலிபரை அடித்து கொன்ற 2 பேர் கைது

உப்பள்ளி டவுனில் வாலிபரை அடித்து கொன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். ஆட்டோவுக்கான வாடகை பணத்தை தராததால் தீர்த்து கட்டியது தெரியவந்தது.

Update: 2021-09-28 21:16 GMT
உப்பள்ளி: உப்பள்ளி டவுனில் வாலிபரை அடித்து கொன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். ஆட்டோவுக்கான வாடகை பணத்தை தராததால் தீர்த்து கட்டியது தெரியவந்தது. 

ஆட்டோ டிரைவர்

உப்பள்ளி டவுன் நேக்கார் நகர் பகுதியை சேர்ந்தவர் லோகேஷ்(வயது 28). ஆட்டோ டிரைவரான இவர், அதேபகுதியை சேர்ந்த மாருதி என்பவரிடம் ஆட்டோவை வாடகைக்கு எடுத்து ஓட்டி வந்தார்.

அதாவது ஒரு நாளைக்கு ரூ.200 வாடகைக்கு ஒப்பந்தம் செய்து கடந்த ஓராண்டாக லோகேஷ் ஆட்டோவை ஓட்டி வந்தார். ஆனால் கடந்த சில நாட்களாக லோகேஷ், மாருதிக்கு ஆட்டோவுக்கான வாடகை பணத்தை கொடுக்காமல் வந்துள்ளார். மேலும் லோகேஷ், மாருதியிடம் வாடகைக்கு வாங்கிய ஆட்டோவை வேறொருவருக்கு வாடகைக்கு விட்டு பணம் சம்பாதித்து வந்தது தெரியவந்தது. 

இதையறிந்த மாருதி கடந்த 26-ந்தேதி லோகேசின் வீட்டிற்கு நேராக சென்று ஆட்டோ வாடகை பணத்தை கொடுக்கும்படி கேட்டுள்ளார். அப்போது லோகேஷ், மாருதியிடம் வாடகை பணத்தை கொடுக்காமல் சாக்குபோக்கு கூறி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாருதி, லோகேசிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது மாருதிக்கும், லோகேசுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. 

அடித்து கொலை

இதையடுத்து வாடகை பணத்தை தராததால் லோகேசை, மாருதி தீர்த்து கட்ட திட்டம் தீட்டினார். இதுபற்றி மாருதி, தனது நண்பர் ராஜு(28) என்பவரிடம் தெரிவித்தார். அதன்படி நேற்று முன்தினம் நள்ளிரவு மாருதி, ராஜு ஆகிய 2 பேரும் உருட்டுக்கட்டையுடன் மோட்டார் சைக்கிளில் லோகேசின் வீட்டிற்கு சென்றுள்ளனர். 

பின்னர் 2 பேரும் வீட்டிற்குள் புகுந்து லோகேசை உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி சென்று விட்டனர். இதில் லோகேஷ் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர், படுகாயம் அடைந்த லோகேசை மீட்டு சிகிச்சைக்காக உப்பள்ளி கிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு கொண்டுச் சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே லோகேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். 

கைது

இதுபற்றி தகவல் அறிந்த பழைய உப்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கும், ஆஸ்பத்திரிக்கும் சென்று விசாரணை நடத்தினர். அதில் ஆட்டோவுக்கான வாடகை பணத்தை தராததால் லோகேசை, மாருதி மற்றும் அவரது நண்பர் ராஜூ 2 பேரும் சேர்ந்து உருட்டுக்கட்டையால் அடித்து கொன்றது தெரியவந்தது. அதன்பேரில் தலைமறைவான மாருதி, ராஜூ ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து பழைய உப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து கைதான 2 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்