தஞ்சை முனிசிபல் காலனி பகுதியில் உள்ள கல்யாண் நகர் பிரதான தெருவில்50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு முறையான குடிநீர் வசதி இல்லை.இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், முதியவர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் குடிநீர் வசதி இல்லாததால் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டு எந்த வித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை எனவும் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கல்யாண்நகர் பிரதான தெருவில் குடிநீர் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.
ராமமூர்த்தி தஞ்சாவூர்
தஞ்சை புதிய பஸ் நிலையத்துக்கு தினமும் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பஸ்கள் வந்து செல்கின்றன. இவற்றில் எண்ணற்ற பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பயணம் செய்து வருகின்றனர். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த தஞ்சை புதிய பஸ் நிலைய நுழைவு வாயில் பகுதியில் ஆபத்தான பள்ளம் ஒன்று உள்ளது. இந்த பள்ளத்தை பஸ்கள் கடக்கும் போது தினமும் நிலை தடுமாறி செல்லும் நிலை உள்ளது.அதுமட்டுமின்றி கல்லூரி மாணவர்கள் பள்ளத்தை பஸ் கடக்கும் போது ஆபத்தை உணராமல் இறங்கி செல்கின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு புதிய பஸ் நிலையத்தில் உள்ள ஆபத்தான பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.
பொதுமக்கள் தஞ்சாவூர்
கல்லணை - திருவையாறு சாலையில் கூத்தூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நாமக்கல், கரூர், திருச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் இருந்து தினமும் எண்ணற்ற இருசக்கர கனரக வாகனங்கள் கல்லணை கொள்ளிடம் ஆற்றில் அமைந்துள்ள புதிய பாலம் வழியாக தஞ்சை, திருவையாறு, கும்பகோணம் போன்ற இடங்களுக்கு சென்று வருகின்றன. இவ்வாறு வரும் வாகனங்கள் மிகவும் வேகமாக கூத்தூர் கிராமத்தில் உள்ள சாலையை கடந்து செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.எனவே, உயிர்பலி எதுவும் ஏற்படும் முன்பு கூத்தூர் கிராம பகுதியில் உள்ள சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும்.
பார்த்தசாரதி விட்டலபுரம்
கும்பகோணம் அருகே திருவழஞ்சுழி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள எம்.ஜி.ஆா் நகரில் பொதுமக்களின் குடிநீர் வசதிக்காக மேல்நிலைநீர்தேக்கத்தொட்டி அமைக்கப்பட்டது. இந்த நீர்தேக்கத்தொட்டியில் இருந்து தினமும் தண்ணீர் நிரம்பி வெளியேறி வீணாகி வருகிறது. இதனால் நீர்தேக்கத்தொட்டியை சுற்றி தண்ணீர் குளம் போல் தேங்கி உள்ளது. இதில் கொசுக்கள் உற்பத்தி ஆகி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. அதுமட்டுமின்றி, நீர் வெளியேறுவதால் நீர்தேக்கத்தொட்டி முழுவதும் பாசி பிடித்து உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேல்நிலைநீர்த்தோக்கத்தொட்டியில் இருந்து குடிநீர் வெளியேறி வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
அன்பழகன் திருவழஞ்சுழி