இருதரப்பினர் இடையே தகராறு; போலீசார் மீது கல்வீச்சு

உசிலம்பட்டி அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறை தடுக்க சென்ற போலீசார் மீது கல்வீசப்பட்டது. இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது

Update: 2021-09-28 20:52 GMT
உசிலம்பட்டி
உசிலம்பட்டி அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறை தடுக்க சென்ற போலீசார் மீது கல்வீசப்பட்டது. இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.
கல்வீச்சு
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எம்.கல்லுப்பட்டி பஸ் நிலையம் அருகில் ஊருணி உள்ளது. இந்த ஊருணிக்கரையில் ஒரு தரப்புக்கு சொந்தமான நிலம் குறித்து கோர்ட்டில் வழக்கு நடந்தது. பின்னர் கோர்ட்டு உத்தரவுப்படி நேற்று பேரையூர் தாசில்தார் ரவிச்சந்திரன் தலைமையில் அதிகாரிகள் நில அளவை செய்தனர். மேலும் நிலம் அளவை செய்யப்பட்ட இடத்தில் கற்கள் ஊன்றப்பட்டன. இதற்கு அதே பகுதியை சேர்ந்த மற்றொரு தரப்பினர், ஊருணி கரையில் நிலம் ஒதுக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். அங்கு நடப்பட்ட கற்களை சேதப்படுத்தினர். 
இதனை உசிலம்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு நல்லு தலைமையிலான போலீசார் தடுக்க முற்பட்டனர். அப்போது போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மேலும் போலீசார் மீது சிலர் கற்களை வீசியதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. 
இதைதொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முரளிதரன் தலைமையில் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். 
சாலை மறியல்
இந்தநிலையில் அளவு செய்து ஊன்றிய கற்களை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். 
அப்போது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

மேலும் செய்திகள்