உரக்கடையில் ரூ.50 ஆயிரம் திருடிய வாலிபர் கைது
உரக்கடையில் ரூ.50 ஆயிரம் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
குன்னம்:
ரூ.50 ஆயிரம் திருட்டு
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள நன்னை கிராமத்தை சேர்ந்தவர் கூத்தப்பன்(வயது 48). இவர் நன்னை கிராமத்தில் உரக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் 4-ந் தேதி இரவு வியாபாரத்தை முடித்த பின்னர், வங்கியில் செலுத்துவதற்காக ரூ.50 ஆயிரத்தை கடையில் வைத்து விட்டு, கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். இந்நிலையில் மர்ம நபர் அந்த கடையின் பூட்டை இரும்பு கம்பியால் நெம்பி உடைத்து கல்லாவில் இருந்த ரூ.50 ஆயிரத்தை திருடிச் சென்றார்.
இது குறித்து கூத்தப்பன் கொடுத்த புகாரின்பேரில் குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் கடையில் பதிவான கைரேகைகளை குற்றப்பதிவு ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்த்தனர். அதில் அந்த கைரேகை, கடந்த 2019-ம் ஆண்டு அகரம்சீகூர் அருகே நடந்த திருட்டு சம்பவத்தில் பதிவான கைரேகையுடன் ஒத்துப்போனது. அதைக்கொண்டு போலீசார் நடத்திய விசாரணையில், உரக்கடையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டம் தென்செட்டியந்தல் கிராமத்தை சேர்ந்த மகேஸ்வரனின் மகன் வெங்கடேசன்(வயது 21) என்பது தெரியவந்தது.
கைது
இதைத்தொடர்ந்து குன்னம் போலீசார் தனிப்படை அமைத்து, வெங்கடேசனின் செல்போன் எண்ணை வைத்து அவரை தேடினர். அதில் கிடைத்த தகவலின்படி குன்னம் போலீசார் வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி கிராமத்திற்கு சென்று, வெங்கடேசனை கைது செய்து குன்னம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரித்தனர். இதில் அவர் பல்வேறு இடங்களில் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் அவரிடம் இருந்த ரூ.10 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அவரை பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.