தென்காசியில் மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும்- மு.க.ஸ்டாலினிடம், பழனி நாடார் எம்.எல்.ஏ. மனு
தென்காசியில் மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும் என மு.க.ஸ்டாலினிடம், பழனி நாடார் எம்.எல்.ஏ. மனு கொடுத்தார்.
சுரண்டை:
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை, தென்காசி சட்டமன்ற உறுப்பினரும், தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவருமான எஸ்.பழனி நாடார் சந்தித்து பேசினார். அப்போது அவர் தென்காசி தொகுதிக்கு உட்பட்ட சுரண்டை நகர பஞ்சாயத்தை நகராட்சியாக தரம் உயர்த்தியதற்கு நன்றி தெரிவித்தார். மேலும் தொகுதியின் வளர்ச்சிக்காக பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதல்-அமைச்சரிடம் கொடுத்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
குற்றாலத்தை சுற்றுலாத்தலமாக உலக வரைபடத்தில் இடம்பெறச் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்காசியில் புறவழிச்சாலை அமைத்து நகரின் வேகமான வளர்ச்சிக்கு வித்திட வேண்டும். தென்காசி தொகுதியில் ஒரு மருத்துவக்கல்லூரி மற்றும் ஒரு வேளாண்மை கல்லூரி அமைக்க வேண்டும். சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரியில் கூடுதலாக 5 புதிய பாடப்பிரிவுகளை சேர்க்க வேண்டும். காலியாக உள்ள பேராசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இரட்டைகுளம் - ஊத்துமலை கால்வாய் திட்டம், ஜம்புநதி கால்வாய் திட்டம் ஆகியவற்றை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் தொழில்நுட்ப பூங்காக்களை அமைக்க வேண்டும். வீரகேரளம்புதூரில் தாலுகா தலைமை மருத்துவமனை அமைக்க வேண்டும். மேலும் தாலுகா அலுவலகம் அமைந்துள்ள இடம் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது. வருவாய்த்துறைக்கும், இந்து சமய அறநிலையத்துறைக்குமான பிரச்சினைக்கு சுமுக தீர்வு கண்டு தாலுகா அலுவலகம் அதே இடத்தில் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களின் வசதிக்காக அனைத்து கிராமங்களை இணைக்கும் வகையில் பஸ்களை இயக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.