அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

மோகனூர் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2021-09-28 19:17 GMT
மோகனூர்:
பொதுமக்கள் முற்றுகை
மோகனூர் அருகே மாடகாசம்பட்டி ஊராட்சி அலுவலத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா தலைமையில் வார்டு உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. அப்போது அதே பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டனர். 
அவர்கள் மாடகாசம்பட்டி ஊராட்சி பகுதியில் குடிநீர் உள்பட அடிப்படை வசதிகள் சரியாக செய்யப்படவில்லை, மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை வழங்குவதில்லை, சாக்கடை கால்வாய் சுத்தம் செய்யப்படவில்லை என பல்வேறு புகார்களை தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை
பொதுமக்களின் போராட்டம் குறித்து தகவல் அறிந்த மோகனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் தேன்மொழி, ஒன்றிய பொறியாளர் சுமதி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுதா ஆகியோர் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 
மேலும் படிப்படியாக கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்