சூறைக்காற்றில் நாசமான வாழைகளை உதவி கலெக்டர் ஆய்வு
திருக்குறுங்குடி பகுதியில் சூறைக்காற்றில் நாசமான வாழைகளை உதவி கலெக்டர் ஆய்வு செய்தார்.
ஏர்வாடி:
திருக்குறுங்குடி, மாவடி, மலையடிப்புதூர், மகிழடி, ராஜபுதூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று முன்தினம் திடீரென சூறைக்காற்று வீசியது. இதில் அப்பகுதிகளில் பயிர் செய்யப்பட்டிருந்த 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் சேதமடைந்தன. நாசமான வாழைகள் ஏத்தன் ரச கதலி வகைகளைச் சேர்ந்த 8 மாத வாழைகள் ஆகும். இதனால் கவலை அடைந்த விவசாயிகள், நாசமான வாழைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர் இந்நிலையில் சேரன்மாதேவி உதவி கலெக்டர் சிவ கிருஷ்ணமூர்த்தி நேற்று திருக்குறுங்குடி பகுதியில் காற்றில் சாய்ந்த வாழைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், நாசமான வாழைகள் குறித்து கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். அவருடன் நாங்குநேரி தாசில்தார் இசக்கி பாண்டி, மகிழடி கிராம நிர்வாக அதிகாரி ராஜரத்தினம் மற்றும் வருவாய்த்துறையினர் சென்றனர்.