மின்பாதை கோளாறுகளை கண்டறிய டிரோன் மூலம் அதிகாரிகள் ஆய்வு
களக்காட்டில் மின்பாதை கோளாறுகளை கண்டறிய டிரோன் மூலம் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
களக்காடு:
களக்காடு, மேலப்பாளையம், நாங்குநேரி பகுதியில் கடந்த சில நாட்களாக அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக வந்த புகாரின் பேரில், மின் தடையை சீர் செய்ய தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழக திருச்சி மண்டல தலைமை பொறியாளர் உமாதேவி உத்தரவின்படி, மேலக்கல்லூர், கரிசல்பட்டி, மேலப்பாளையம், களக்காடு, கரந்தாநேரி, ரெயில் நிலையம், நாங்குநேரி, வள்ளியூர் அண்ணாநகர், தண்டையார்குளம், வடக்கன்குளம், சங்கநேரி ஆகிய 110 கேவி மின் திறன் கொண்ட மின்சார நிலையங்களில் 130 கி.மீ, தூரம் மின்பாதைகளில் டிரோன் மூலம் கோளாறுகளை கண்டறியும் பணி நடந்து வருகிறது. அதன்படி களக்காடு மின் நிலையத்தில் டிரோன் மூலம் மின் கோளாறுகளை கண்டறியும் ஆய்வு பணி நடந்தது.
நெல்லை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் (பொறுப்பு) சாமுவேல் தலைமையில், கயத்தாறு செயற்பொறியாளர் பாவநாசம், உதவி செயற்பொறியாளர்கள் பாலசுப்பிரமணியன் கயத்தாறு, ஜெயலட்சுமி செண்பகராமன்புதூர், சார்லஸ், நெல்லை, இளநிலை பொறியாளர்கள் தூத்துக்குடி ரத்னகுமார், கயத்தாறு பேசில் புஷ்பா மற்றும் மின்வாரிய ஊழியர்கள் டிரோன் மூலம் மின்பாதைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
பொதுவாக பறவைகள், மின்னல், மரங்கள், நில மின் தடைகள் (எர்த்) மூலம் அதிகளவிலான மின் கோளாறுகள் ஏற்படுவதாகவும் விரைவில் தடையில்லா மின் வினியோகம் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.