வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக பதுக்கிய 100 மின்விசிறிகள் பறிமுதல்
திருக்கோவிலூர் அருகே வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 மின்விசிறிகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருக்கோவிலூர்,
கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற 6 மற்றும் 9-ந்தேதிகளில் நடைபெற உள்ளது. இதையடுத்து வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் திருக்கோவிலூர் அருகே மிலாரிப்பட்டு கிராமத்தில் வாக்காளர்களுக்கு தேர்தல் சமயத்தில் பரிசாக கொடுப்பதற்காக மின்விசிறிகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரியான திருக்கோவிலூர் துணை தாசில்தார் விஜயன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் அதிகாரிகள் மிலாரிப்பட்டு கிராமத்தில் குறிப்பிட்ட இடத்திற்கு சென்றனர்.
100 மின்விசிறிகள்
பின்னர் அங்கு ரகோத்தமன் மற்றும் மணிகண்டன் ஆகியோரது வீடுகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் அட்டை பெட்டிகளில் 100 மின்விசிறிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் இந்த மின்விசிறிகள், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மின்விசிறிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக ரகோத்தமன், மணிகண்டன் மீது திருப்பாலபந்தல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் மணிகண்டன் கூவனூர் ஊராட்சியில் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.