திருப்பத்தூர் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 100 நடமாடும் போலீஸ் குழு
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 100 நடமாடும் போலீஸ் குழு அமைக்கப்பட்டு உள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.;
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 100 நடமாடும் போலீஸ் குழு அமைக்கப்பட்டு உள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஆலோசனை கூட்டம்
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 6 ஊராட்சி ஒன்றியங்களுக்கு அடுத்த மாதம் 6 மற்றும் 9-ந் தேதி ஊரக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் மொபைல் பார்டி ஆலோசனைக்கூட்டம் ரெயில்வே சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமை தாங்கி பேசியதாவது:-
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலை அமைதியாகவும், எவ்வித அசம்பாவிதமுமின்றி நடத்திட காவல்துறை சார்பில் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட தேர்தலில் 1,200 போலீசாரும், இரண்டாவது கட்ட தேர்தலில் 700 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
100 நடமாடும் போலீஸ் குழு
தேர்தலுக்காக 100 நடமாடும் போலீஸ் குழு (மொபைல் பார்ட்டி) அமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ளவர்கள் வாக்குச் சாவடி மையத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு வாக்குப் பதிவு எந்திரங்களை கொண்டு சேர்க்க வேண்டும். அதேப்போல் வாக்குப்பதிவு முடிவடைந்ததும், வாக்குப் பதிவு எந்திரங்களை வாக்கு எண்ணும் மையங்களுக்கு பாதுகாப்பாக கொண்டு சென்று சேர்க்க வேண்டும்.
வாக்குப்பதிவு அன்று பொதுமக்கள் கூட்டமாக கூடியிருப்பது தெரியவந்தால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு உடனே தெரிவிக்க வேண்டும். மேலும் ரோந்து பணியின்போது கண்காணிப்பு பணியில் எவ்வித தொய்வும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் துணைபோலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.