தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டியில் வெளிவந்துள்ள நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்ட செய்திகள் வருமாறு:-;
கருவேல மரங்களை அகற்ற வேண்டும்
நாகை நகராட்சி பகுதியில் உள்ள மகாலெட்சுமி நகரில் சாலையின் இருபுறமும் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால், இருசக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்களில் வருபவர்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்கி காயம் அடைகின்றனர்.குறிப்பாக கருவேல மரங்களின் கிளைகள் வாகனங்களின் செல்வோரின் மீது உரசி காயங்கள் ஏற்பட்டு வருகிறது. .இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். .எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையின் இருபுறமும் வளர்ந்துள்ள கருவேலமரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்
-நாகராஜன், நாகப்பட்டினம்.
குளத்தில் கழிவுநீர் கலப்பதால் துர்நாற்றம்
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையை அடுத்த திருவிடைமருதூர் ஊராட்சி பகுதியில் அருந்தவம்புலம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள தாமரைக்குளம் முறையான பராமரிப்பின்றி காணப்படுகிறது. மேலும் குப்பைகள் கொட்டப்பட்டு குப்பை மேடாகி வருகிறது. தாமரைக்குளத்தில் கழிவுநீரும் கலப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாமரைகுளத்தில் குப்பை கொட்டுவதையும், கழிவுநீர் கலப்பதையும் தடுத்து நிறுத்தி தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பொதுமக்கள், அருந்தவம்புலம்.
சுகாதாரமற்ற பயணிகள் நிழலகம்
மயிலாடுதுறையை அடுத்த திருக்கடையூர் அபிராமி அம்மன் கோவில் அருகே பயணிகள் நிழலகம் உள்ளது. இந்த பயணிகள் நிழலகம் தற்போது முறையான பராமரிப்பின்றி சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. இங்கு ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடை கழிவுகள் கிடக்கின்றன. இதன் காரணமாக ஈ, மற்றும் கொசுக்கள் அதிகளவில் காணப்படுகின்றன. இதனால் பயணிகள் நிழலகத்துக்கு பஸ் ஏற வரும் பொதுமக்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சுகாதாரமற்ற நிலையில் உள்ள பயணிகள் நிழலகத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜன் செல்வா, மயிலாடுதுறை.
மின்கம்பத்தை சூழ்ந்த மரக்கிளைகள்
திருவாரூர் மாவட்டம் அடிபுதுச்சேரி கிராமத்தில் ஆற்றங்கரையோரம் பாலம் அருகே மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மின்கம்பங்கள் முறையான பராமரிப்பின்றி காட்சி அளிக்கின்றன. இதன் காரணமாக மின்கம்பங்களை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. அதுமட்டுமின்றி சில மின்கம்பங்களை மரக்கிளைகள் சூழ்ந்து உள்ளன.மேலும், மின்கம்பங்களில் உள்ள மின் விளக்குகளை மரக்கிளைகள் மறைத்தபடி வளர்ந்துள்ளன.இதனால் மின்விளக்கு இருந்தும் இரவு நேரங்களில் வெளிச்சம் இன்றி பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.மேலும், மரக்கிளைகளும், மின்கம்பிகளும் உரசிக்கொள்வதால் அடிக்கடி மின்தடையும் ஏற்படுகிறது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்கம்பங்களை சூழ்ந்துள்ள மரக்கிளைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும்.
-ராஜமாணிக்கம். அடிபுதுச்சேரி.
பாசன வாய்க்கால் தூர்வாரப்படுமா?
திருவாரூர் மாவட்டம் வயலூர் ஊராட்சி வடமட்டம் கடைத்தெருவில் முதல்கட்டளை பாசன வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் மூலம் குடவாசல் பகுதி திருவீழிமிழலை ஊராட்சி முதல் கட்டளை கிராமம் 125 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. தற்போது இந்த பாசன வாய்க்கால் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காட்சி அளிக்கிறது.அதுமட்டுமின்றி வாய்க்கால் தூர்வாரப்படாமல் உள்ளதால், கடைமடை வரை தண்ணீர் செல்லாமல் விவசாய நிலங்களில் பயிர்கள் கருகும் நிலை உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
எனவே கடைமடை வரை தண்ணீர் செல்ல வசதியாக, முதல் கட்டளை பாசன வாய்க்காலை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செந்தமிழன், வயலூர்.