அறிவுரை கூறிய அரசு டாக்டர் மீது தாக்குதல்
அறிவுரை கூறிய அரசு டாக்டர் மீது தாக்குதல்
கோவை
குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் அஜாக்கிரதையாக பயணித்த வருக்கு அறிவுரை கூறிய அரசு டாக்டரை தாக்கிய காண்டிராக்டரை போலீசார் கைது செய்தனர்.
அரசு டாக்டர்
கோவை உப்பிலிபாளையம், விவேகானந்தா நகர் பகுதியை சேர்ந்தவர் கணேஷ் சந்திரகலான் (வயது 47). இவர் செஞ்சேரிமலை மலையடி பாளையத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் பணி முடிந்து வீட்டிற்கு வரும் வழியில் வீட்டிற்கு முன்புறம் உள்ள சாலையில் பாஸ்கரன் (35) என்ற காண்டிராக்டர் தனது 2 வயது குழந்தையை மோட்டார் சைக்கிளில் முன்பக்கம் அமரவைத்து, ஒரு கையில் வாகனத்தை ஓட்டியதாக தெரிகிறது.
தாக்குதல்
இதைப் பார்த்த டாக்டர் "குழந்தையை முன்பக்கம் உட்காரவைத்து, இப்படி ஒரு கையில் வாகனத்தை ஓட்ட வேண்டாம்' ஏதாவது விபத்து ஏற்பட்டுவிடும் என்று அறிவுரை வழங்கினார். .அதற்கு, அவர் "என் குழந்தை என்ன ஆனாலும் உனக்கு என்ன பிரச்சினை? என்று கூறி வாக்குவாதம் செய்துள்ளார்.
அப்போது செல்போனில் டாக்டர் வீடியோ எடுக்க முயன்றதாக தெரிகிறது. இதனால் டாக்டரை பாஸ்கரன் மற்றும் அவருடைய மனைவி உறவினர்கள் சேர்ந்து தாக்கி செல்போனை பறித்து உள்ளனர்.
காண்டிராக்டர் கைது
இதில் காயம் அடைந்த டாக்டர், கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அத்துடன் இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காண்டிராக்டர் பாஸ்கரனை கைது செய்தனர்.