வ உ சிதம்பரனார் சிலையின் மாதிரி படம் வெளியீடு
வ உ சிதம்பரனார் சிலையின் மாதிரி படம் வெளியீடு
கோவை
கோவை வ.உ.சி. பூங்காவில் அமைக்கப்பட உள்ள வ.உ.சிதம்பரனாரின் முழு உருவச்சிலை மாதிரி படம் வெளியிடப்பட்டு உள்ளது.
150-வது பிறந்தநாள்
கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் என்று அழைக்கப்படும் வ.உ.சிதம்பரனார், நமது நாடு சுதந்திரம் பெற அயராது பாடுபட்டார். அவரை கைது செய்த ஆங்கிலேயர்கள் கோவை சிறையில் அடைத்து செக்கிழுக்க வைத்தனர்.
அவரது நினைவாக கோவை மத்திய சிறை அருகே இருக்கும் பூங்கா மற்றும் மைதானத்துக்கு வ.உ.சி.யின் பெயர் சூட்டப்பட்டு உள்ளது.
அவர் இழுத்த செக்கும் நூற்றாண்டை கடந்து கோவை சிறை வளாகத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு உள்ளது.
வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில், கோவை வ.உ.சி. பூங்காவில் சிதம்பரனாருக்கு முழு உருவச்சிலை அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
வ.உ.சி. பூங்காவில் இடம் தேர்வு
இதன்படி பூங்காவில் வ.உ.சி.க்கு முழு உருவச்சிலை அமைப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பூங்கா வளாகத்துக்குள் முழு உருவச்சிலை அமைப்பதற்கான திட்ட விவர அறிக்கை தயாரிக்க உத்தரவிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து அதிகாரிகள் பூங்காவுக்கு சென்று சிலை எங்கு அமைக்கலாம்? என்று இடத்தை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து பூங்காவின் தெற்குபுறம் உள்ள நுழைவாயில் அருகே இடதுபுறம் குழந்தைகளை கவரும் வகையில் மாதிரி விமானம் ஒன்று உள்ளது. அதன் அருகே வ.உ.சி.க்கு சிலை அமைக்க முடிவு செய்யப் பட்டு உள்ளது.
சிலையின் மாதிரி படம்
இதற்கு தேவையான இடம் ஒதுக்குமாறு மாநகராட்சியிடம் பொதுப்பணித்துறை கோரியது. இதையடுத்து 50 அடி அகலம், 45 அடி நீளம் இடம் ஒதுக்கி பொதுப்பணித்துறைக்கு மாநகராட்சி தடை யின்மை சான்றிதழ் வழங்கி உள்ளது.
சிலை அருகே வ.உ.சியை போற்றும் வகையில் அவரது புகைப்படங்கள் அடங்கிய கண்காட்சி அரங்கமும் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறும்போது, முதல் கட்டமாக வ.உ.சி.க்கு சிலை அமைக்க தேவையான இடம் ஒதுக்கப் பட்டு உள்ளது. இனி அரசாணை வெளியிட வேண்டும். திட்ட மதிப்பீடு தயாரித்து ஒப்பந்தம் கோரி நிறுவனம் தேர்வு செய்யப்படும்.
அதன்பிறகே சிலை வடிவமைத்து அரசு ஒப்புதல் பெற்று நிறுவப்படும். தற்போது முமு உருவச்சிலைக்கான மாதிரி வரைபடம், மற்றும் வீடியோ தயார் செய்யப்பட்டு உள்ளது என்றனர்.
பொதுமக்கள் கோரிக்கை
கோவை வ.உ.சி.பூங்காவில் வ.உ.சிதம்பரனாருக்கு முழுஉருவச்சிலை அமைப்பதை பொதுமக்கள் வரவேற்று உள்ளனர். தற்போது வ.உ.சி. இழுத்த செக்கு, கோவை மத்திய சிறை வளாகத்தில் உள்ளது. வ.உ.சி.யின் பிறந்தநாள் மற்றும் நினைவு தினத்தில் மட்டும் செக்கை பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
மற்ற நாட்களில் அனுமதிப்பது இல்லை. எனவே பொதுமக்கள் தடையில்லாமல் அந்த செக்கை பார்வையிடும் வகையில் வ.உ.சி. பூங்காவில் அமைக்கப்படும் சிலை அருகே செக்கை வைத்து பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.