கோவையில் 3 பேரிடம் ரூ 7¼ லட்சம் மோசடி
கோவையில் 3 பேரிடம் ரூ 7¼ லட்சம் மோசடி
கோவை
வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ரகசிய குறியீடு எண்ணை பெற்று கோவையில் 3 பேரிடம் ரூ.7¼ லட்சம் மோசடி செய்யப்பட்டு உள்ளது.
குறுஞ்செய்தி வந்தது
கோவை துடியலூர் அருகே உள்ள கே.கே.புதூரை சேர்ந்தவர் செல்வக் குமரன் (வயது 38). இவர் லேத் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். இவருடைய செல்போனுக்கு கடந்த 26-ந் தேதி ஒரு குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) வந்தது.
அதில் உங்கள் "வங்கி கணக்கு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
எனவே, கே.ஒய்.சி அப்டேட் செய்ய கீழே உள்ள லிங்கை அழுத்தினால் மீண்டும் வங்கி கணக்கை புதுப்பித்து விடலாம்" என கூறப்பட்டு இருந்தது.
ரகசிய எண்
இதனை பார்த்த செல்வக்குமரன் அந்த லிங்கை அழுத்தி உள்ளே சென்றார். அதில் தன்னுடைய வங்கி கணக்கு குறித்த தகவல்கள் ஆகியவற்றை பதிவு செய்தார். பின்னர் அவரது செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது.
அதில் பேசிய நபர், "தான் வங்கியில் இருந்து பேசுவதாகவும், உங்க ளது கணக்கை புதுப்பித்து கொள்ள செல்போனில் வரும் ஓ.டி.பி எண்ணை (ரகசிய குறியீடு எண்) தெரிவிக்கும்படி கூறினார். உடனே செல்வக்குமரனும் அந்த எண்ணை கூறி உள்ளார்.
பணம் எடுத்து மோசடி
சிறிது நேரத்தில் அவருடைய வங்கி கணக்கில் இருந்து ரூ.4 லட்சத்து 98 ஆயிரத்து 653 எடுக்கப்பட்டு இருப்பதாக செல்போனுக்கு எஸ்.எம். எஸ். வந்தது. அப்போதுதான் மர்ம நபர் தன்னிடம் பேசி ஓ.டி.பி. எண்ணை பெற்று தனது வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து மோசடி செய்தது தெரியவந்தது.
கோவை ரத்தினபுரி அருகே உள்ள தாசப்பன் வீதியை சேர்ந்தவர் மணிமாறன் (43). இவர் கணபதியில் தொழிற்சாலை நடத்தி வருகிறார். கடந்த 26-ந் தேதி இவரிடமும் அதுபோன்று பேசி ரூ.1 லட்சத்து 69 ஆயிரத்து 900 மோசடி செய்து உள்ளனர்.
3 பேரிடம் ரூ.7¼ லட்சம்
சித்தாபுதூரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (51). இவரிடமும் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி தொடர்பு கொண்ட மர்ம ஆசாமி, அவரது வங்கி கணக்கில் இருந்து 65 ஆயிரம் பணத்தை எடுத்து மோசடி செய்துள்ளார்.
கோவையில் ஒரே நாளில் 3 பேரிடமும் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி மொத்தம் ரூ.7 லட்சத்து 33 ஆயிரத்து 553-ஐ மர்ம நபர்கள் மோசடி செய்து உள்ளனர். இது குறித்து கோவை மாநகர் மற்றும் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது குறித்து சைபர்கிரைம் போலீசார் கூறியதாவது:-
ஏமாற வேண்டாம்
நாம் கணக்கு வைத்திருக்கும் வங்கிகள் நமக்கு நேரடியாக போன் செய்து அல்லது எஸ்.எம்.எஸ். மூலம் நமது விவரங்களைக் கேட்பது இல்லை. அவ்வாறு வரும் அழைப்புகள், எஸ்.எம்.எஸ்.கள் மோசடி யானவைதான். இது தொடர்பாக வங்கிகளே விழிப்புணர்வு செய்து வருகின்றன. இருந்தபோதிலும் இருப்பினும் இது குறித்த விழிப்புணர்வு மக்களிடையே குறைவாக உள்ளது.
ஒரு லிங்க்கை அனுப்பி, அதை கிளிக் செய்தால் பணம் கிடைக்கும் என்றெல்லாம் எஸ்.எம்.எஸ் வரும். அதை கிளிக் செய்தால் உங்களது தனிநபர் தகவல்கள் திருடப்பட்டு, பண மோசடி நடைபெற வாய்ப்பு உள்ளது. கே.ஒய்.சி நடைமுறையில் கேஷ் பேக் ஆபர்கள் எதையும் வங்கிகள் வழங்குவதில்லை. எனவே பொதுமக்கள் ஏமாற வேண்டாம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.