குடியாத்தம் அருகே சுடுகாடு வசதி கேட்டு கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்

குடியாத்தம் அருகே சுடுகாடு வசதி கேட்டு தேர்தலை புறக்கணிக்க போேவதாக கூறி, கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-09-28 17:38 GMT
குடியாத்தம்

குடியாத்தம் அருகே சுடுகாடு வசதி கேட்டு தேர்தலை  புறக்கணிக்க போேவதாக கூறி, கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுடுகாடு வசதி இல்லை

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் டி.பி.பாளையம் ஊராட்சி, தண்ணீர்பந்தல் கிராமத்தில் சுமார் 100 குடும்பங்கள் உள்ளன. 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். தண்ணீர்பந்தல் கிராமத்தில் பெரும்பாலும் தலித் இன மக்கள் வசித்து வருகின்றனர்.
தண்ணீர்பந்தல் கிராம மக்களுக்கு என தனியாக சுடுகாடு வசதி இல்லாததால் இறப்பவர்களை தங்களின் சொந்த நிலங்களிலும், ஓடையில் ஓரத்திலும் அடக்கம் செய்து வந்துள்ளனர். மழை பெய்தால் ஓடை பகுதியில் அடக்கம் செய்யப்பட்ட உடல்கள் வெளியே தெரியும் அவலநிலை உள்ளது. எனவே சுடுகாடு வசதி செய்து தரவேண்டும் என பல ஆண்டுகளாக அதிகாரிகளுக்கு மனு அளித்து வருகின்றனர். விசாரணை நடத்த அப்பகுதிக்கு வருகைதரும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், சுடுகாடு வசதி ஏற்படுத்தி தருவதாக வாக்குறுதி அளிக்கின்றனர். அதன் பின் நடவடிக்கை எடுப்பதில்லை என கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்

மேலும் சுடுகாடு வசதிக்காக அப்பகுதியில் உள்ள இரண்டு ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தையும் அதிகாரிகளுக்கு கிராம மக்கள் காட்டி உள்ளனர். இருப்பினும் அதிகாரிகள் இவர்களுக்கு சுடுகாடு வசதி ஏற்படுத்தித் தரவில்லை என கூறப்படுகிறது.
தண்ணீர்பந்தல் கிராம மக்கள் உடனடியாக சுடுகாடு வசதி செய்து தர வலியுறுத்தி நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பு செய்வதாக நேற்று காலையில் டி.பி.பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக  தேர்தல் புறக்கணிப்பு பதாகைகளை கையில் ஏந்தியும், கருப்புக் கொடி ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்