தேர்தல் விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை

தேர்தல் விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை

Update: 2021-09-28 16:18 GMT
பொள்ளாச்சி

ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதால் விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

ஆலோசனை கூட்டம்

பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் காலியாக உள்ள தென்குமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கும், ஆனைமலை ஒன்றியத்தில் திவான்சாபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கும், வடக்கு ஒன்றியத்தில் போளிகவுண்டன்பாளையம் ஊராட்சியில் 4-வது வார்டு உறுப்பினருக்கும், ஜமீன்முத்தூர் ஊராட்சியில் 6-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதன்படி வருகிற 9-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

கடந்த 25-ந் தேதி இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு, சின்னங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்த நிலையில் பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. 

இதற்கு தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில்குமார் தலைமை தாங்கி, தேர்தல் நடத்தை விதிகள் குறித்த கையேட்டை வேட்பாளர்களுக்கு வழங்கினார்.
இதுகுறித்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கூறியதாவது:-

தேர்தல் நடத்தை விதிகள்

ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் ரூ.34 ஆயிரமும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் ரூ.15 ஆயிரம் வரையும் தேர்தல் செலவாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

தேர்தல் நடைபெறும் நாள் வரை பிரசாரங்களுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களில் பொருத்தப்பட்டு இருக்கும் ஒலிப்பெருக்கிகளை காலை 6 மணியில் இருந்து இரவு 10 மணி வரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். 7-ந் தேதி மாலை 6 மணிக்கு பிறகு பிரசாரம் செய்ய கூடாது.

பொதுக்கூட்டங்கள் அல்லது ஊர்வலங்களுக்கு ஒலிப்பெருக்கியினை பயன்படுத்த போலீசாரின் எழுத்துபூர்வமான முன் அனுமதி பெற வேண்டும். வரையறுக்கப்பட்ட நேரங்களுக்கு மேல் அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் எழுத்து மூலமான அனுமதியின்றி பயன்படுத்தப்படும்

 அனைத்து ஒலிப்பெருக்கிகளும், அதை பயன்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களும் பறிமுதல் செய்யப்படும். மேலும் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக போலீசார் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கார்த்திக் மற்றும் வேட்பாளர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்