கால்வாயை ஆக்கிரமித்து இருந்த ஓட்டல் அகற்றம்
கால்வாயை ஆக்கிரமித்து இருந்த ஓட்டல் அகற்றம்
ஊட்டி, செப்.29-
வடகிழக்கு பருவமழையையொட்டி மழைநீர் வடிகால்களில் தூய்மை பணி மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி ஊட்டி நகராட்சியில் தூய்மை பணிகள் நடந்து வருகின்றன. ஊட்டி சேரிங்கிராசில் நொண்டிமேடு பகுதியில் இருந்து வரும் மழைநீர் கால்வாய் அடைத்து இருந்ததால், சாலையில் வெள்ளம் வழிந்தோடியது.
இதனை ஆய்வு செய்த அதிகாரிகள் அந்த மழைநீர் கால்வாய் செல்லும் பகுதியை பார்வையிட்டனர். அப்போது கால்வாய் மேல் பகுதியில் ஆக்கிரமித்து ஒருவர் கடந்த சில ஆண்டுகளாக ஓட்டல் நடத்தி வந்தது தெரியவந்தது. இந்த நிலையில் நேற்று ஊட்டி நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தூய்மை பணிக்கு இடையூறாகவும், மழைநீர் கால்வாயை ஆக்கிரமித்து வைத்த ஓட்டலை அகற்றவும் ஆணையாளர் அறிவுறுத்தினார்.
அதன் பின்னர் ஓட்டலில் இருந்த பொருட்கள் எடுக்கப்பட்டு, அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு காலி செய்யப்பட்டது. தொடர்ந்து கால்வாயில் வேறு ஏதும் அடைப்பு உள்ளதா என்று பார்வையிட்டு, பொக்லைன் எந்திரம் மூலம் தூர்வாரும் பணிகள் நடந்து வருகிறது.