பாலியல் தொந்தரவு வழக்குகள் அதிகரிப்பு
பாலியல் தொந்தரவு வழக்குகள் அதிகரிப்பு
திருப்பூர்
பின்னலாடை தொழில் மூலம் உலக அளவில் பிரசித்தி பெற்ற ஊர் திருப்பூர். ஊராட்சி பகுதியாக இருந்த திருப்பூர் ஏற்றுமதி வர்த்தகம் மூலமாக டாலர் சிட்டியாக திகழ்ந்து வருகிறது. தொழில் வளர்ச்சியின் காரணமாக வெளிமாவட்ட மக்களையும் தாண்டி இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இருந்தும் தொழிலாளர்கள் திருப்பூர் வந்து பணியாற்றி வருகிறார்கள். உழைப்பவர்களின் உறைவிடமாக திருப்பூர் திகழ்ந்து வருகிறது. மக்கள் தொகைக்கு ஏற்ப இங்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் குறைவு. இருப்பினும் வாடகை வீடுகளில் குடியேறும் தொழிலாளர்கள் வாழ்க்கையை நகர்த்தி வருகிறார்கள்.
தொழில் வளர்ச்சிக்கு பெயர் பெற்றாலும் கூட, குற்ற சம்பவங்களும் அதிகரித்து வருவது காவல்துறைக்கு சவாலாக அமைந்துள்ளது. சிறப்பு தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை கைது செய்து சிறையில் தள்ளிவருவது ஒருபுறம் என்றாலும் மறுபுறம் குற்ற செயல்கள் அரங்கேறி வருகிறது. இந்தநிலையில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் தொந்தரவு சம்பவங்கள் அதிகரித்து வருவது மகளிர் போலீசாரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
செல்போன்
கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் செயல்படாமல் ஒரு வருடமாக மூடப்பட்டுள்ளது. தற்போது 9-ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை வகுப்புகள் தொடங்கி நடக்கிறது. பள்ளிகள் திறக்கப்படாததால் ஆன்லைன் வகுப்புகள் நடந்தபோது செல்போன் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் மாணவர்களுக்கு ஏற்பட்டது. அதிக நேரம் செல்போனை கையில் வைத்திருக்கும் மாணவிகள் சிலர் தேவையில்லாத நபர்களுடன் பழக்கத்தையும் ஏற்படுத்த தொடங்கினார்கள். குறிப்பாக சமூக வலைதள பக்கம் மூலமாக பழக்கம் ஏற்பட்டு காதலாகி பின்னர் வீட்டை விட்டே வெளியேறும் சம்பவங்கள் அதிகரிக்க தொடங்கியிருக்கிறது.
தனது மகளை காணவில்லை என்று பெற்றோர் போலீசில் புகார் செய்ததும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்கள். அதன்பிறகே இளைஞருடன் அந்த மாணவி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. திருமண ஆசை வார்த்தை கூறி அந்த வாலிபர் மாணவிகளை அழைத்துச்சென்று திருமணம் செய்வதுடன், பாலியல் தொந்தரவு செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. அதன்பிறகு மாணவியை மீட்டு 18 வயதுக்கு கீழ் இருப்பதால் போச்சோ சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்து வருகிறார்கள்.
கண்காணிக்க வேண்டும்
இதில் கொடுமை என்னவென்றால் இன்ஸ்டாகிராம் டெலிகிராம் வாட்ஸ்அப் முகநூல் மூலமாக பழக்கம் ஏற்பட்டு, அந்தரங்க புகைப்படங்களை பதிவிட்டு பரிமாறும் அளவுக்கு பழக்கம் நீடிக்கிறது. இதுபோல் போக்சோ பிரிவில் பதிவான வழக்குகள் திருப்பூர் மாநகரில் கடந்த 3 மாதங்களில் மட்டும் 20ஐ தாண்டும். இதுதவிர விசாரணையோடு சுமூகமாக முடித்துக்கொள்ளும் புகார்களும் அதிகம்.
மாணவிகளோ மாணவர்களோ செல்போனில் அதிக நேரம் செலவிடுவதை பெற்றோர் அவசியம் கண்காணிக்க வேண்டும். பெற்றோருடன் இருக்கும்போது, அழைப்பு வந்தால் தனியாக ஓடிச்சென்று பேசுவது, தனி அறையில் செல்போனில் உரையாடுவது போன்றவற்றை முடிந்த அளவுக்கு பெற்றோர் கண்காணிக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
விழிப்புணர்வு
இதுதவிர பள்ளிகளுக்கு சென்று பதின்பருவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள். முடிவு எடுக்க முடியாத வயதில் வாழ்க்கையை மாணவிகள் முடிவு செய்யக்கூடாது. நன்கு பழகி பேசும் வாலிபர்களின் பேச்சை நம்பி அந்தரங்க புகைப்படங்களை பதிவிட்டால் அதை வைத்து மிரட்டி தங்கள் இச்சைக்கு ஆளாக்க நினைக்கிறார்கள்.
இதுபோல் எல்லைமீறும் ஆசாமிகளை உடனடியாக மாணவிகள் பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். பெண் பிள்ளைகள் வைத்திருக்கும் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுடன் நேரம் செலவிட்டு அவர்களின் நடவடிக்கையை கண்காணிப்பது மிகவும் அவசியமாகிறது.