வீட்டை தரைமட்டமாக்கிய விநாயகன் காட்டு யானை

வீட்டை தரைமட்டமாக்கிய விநாயகன் காட்டு யானை

Update: 2021-09-28 14:19 GMT
வீட்டை தரைமட்டமாக்கிய விநாயகன் காட்டு யானை
கூடலூர்

கூடலூர் தாலுகா தொரப்பள்ளி ஸ்ரீ மதுரை முதுமலை மற்றும் அதன் சுற்று வட்டார கிராம மக்கள் மற்றும் விவசாயிகளை விநாயகன் காட்டுயானை தினமும் மன ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கோவை நகருக்குள் புகுந்து அட்டகாசம் செய்கிறது என்ற காரணத்தால் விநாயகன் காட்டு யானையை வனத்துறையினர் பிடித்து முதுமலையில் விட்டனர். 


இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இருப்பினும் ஊருக்குள் வராத வகையில் கண்காணிக்கப்படும் என வனத்துறையினர் உறுதி அளித்திருந்தனர். ஆனால் அதற்கு நேர்மாறாக விநாயகன் காட்டுயானை வழக்கம்போல் தனது அட்டகாசத்தை தொடர்ந்து வருகிறது. இதனால் அனைத்து தரப்பினரும் நிம்மதியை இழந்து உள்ளனர். 

இந்தநிலையில் ஸ்ரீமதுரை ஊராட்சி மேலம்பலம் கிராமத்தை சேர்ந்த கயம்மன் என்பவரது வீட்டை நேற்று முன்தினம் விநாயகன் காட்டு யானை உடைத்து சேதப்படுத்தியது. மேலும் அங்கு வைத்திருந்த அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களை நாசம் செய்தது.

பின்னர் அங்கிருந்து சென்றது இதனால் கவலையடைந்த ஆதிவாசி மக்கள் சேதமடைந்த பகுதிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நள்ளிரவு மீண்டு அப்பகுதிக்கு வந்த விநாயகன் காட்டுயானை கயம்மன் ஆதிவாசி வீட்டை மீண்டும் உடைத்து தரைமட்டமாக்கியது. 

இதனால் அதிர்ச்சி அடைந்த கயம்மன் குடும்பத்தினர் அங்கிருந்து தப்பி ஓடினர். மேலும் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் பயன்படுத்த முடியாத வகையில் சேதமடைந்தது. இதையறிந்த ஆதிவாசி மற்றும் ஊராட்சி பொதுமக்கள் அப்பகுதிக்கு விரைந்து வந்து விநாயகன் காட்டு யானையை விரட்டியடித்தனர். பட்ட காலிலே படும் என்பது போல வீட்டை தொடர்ந்து தாக்கி தரைமட்டமாக்கிய சம்பவம் ஆதிவாசி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகள்