விளாத்திகுளம் அருகே, கோவில் விளக்கில் எரிந்த தீ ஆடையில்பிடித்து சிறுமி பலி

விளாத்திகுளம் அருகே, கோவில் விளக்கில் எரிந்த தீ ஆடையில்பிடித்து சிறுமி பலியானார்

Update: 2021-09-28 14:18 GMT
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் அருகே சாமி கும்பிட சென்றபோது கோவில் விளக்கில் எரிந்த தீ ஆடையில் பிடித்து சிறுமி உடல் கருகி பலியானாள்.
இந்த சோக சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
தொழிலாளி குடும்பம்
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஜமீன் செங்கப்படை கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன், கூலித்தொழிலாளி. இவருக்கு விவசாய நிலமும் உள்ளது. இவரது மனைவி மதிவதனா. இந்த தம்பதிக்கு தெய்வ வெனுசியா (வயது 6), தெய்வ கனுசியா (4) ஆகிய இரு குழந்தைகள்.
வேல்முருகன் வீட்டின் அருகில் விநாயகர் கோவில் உள்ளது. கடந்த 21-ந் தேதி காலை விநாயகர் கோவிலில் தெய்வ வெனுசியா, தெய்வ கனுசியா உள்ளிட்ட 4 குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர்.
உடலில் தீப்பிடித்தது
அப்போது தெய்வ வெனுசியா கோவில் உள்ளே சென்று சாமி கும்பிட்டாள். பின்னர் திருநீறு பூச முயன்றபோது அங்கு விளக்கில் எரிந்து கொண்டிருந்த தீ தெய்வ வெனுசியா ஆடையின் மீது எதிர்பாராதவிதமாக பற்றிப்பிடித்து எரிந்தது. பின்னர் உடல் முழுவதும் தீ பரவியது.
இதனால் வலிதாங்க முடியாமல் அவள் அலறினாள். கோவிலில் இருந்து உடலில் தீ எரிந்தபடி, அலறியடித்துக்கொண்டு வீட்டிற்கு ஓடி வந்தாள். அவள் அணிந்திருந்த கவுனில் தீப்பற்றி, அது உடலில் ஒட்டிக்கொண்டது.
சாவு
மகள் உடலில் தீ எரிந்தபடி வீட்டுக்கு ஓடி வந்ததை பார்த்ததும் மதிவதனா அதிர்ச்சி அடைந்தார். உடனே தெய்வ வெனுசியா உடல் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தார். பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தெய்வ வெனுசியாவை விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். பின்னர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி தெய்வ வெனுசியா நேற்று பரிதாபமாக இறந்தாள்.
இதுகுறித்து விளாத்திகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமி தீயில் உடல் கருகி பலியான சம்பவம் ஜமீன் செங்கப்படை கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்