கவுரவ விரிவுரையாளருக்கு கொரோனா அரசு கலைக்கல்லூரி மூடல்
கவுரவ விரிவுரையாளருக்கு கொரோனா அரசு கலைக்கல்லூரி மூடல்
ஊட்டி
கொரோனா பாதிப்பால் முழு ஊரடங்குக்கு பின்னர் கடந்த 1-ந் தேதி முதல் கல்லூரிகள், பள்ளிகள் திறந்து செயல்பட்டு வருகிறது. ஊட்டி அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை ஆன்லைன் மற்றும் நேரடியாக நடந்து வருகிறது. இந்த பணியை கவனித்து வந்த வணிகவியல் பாடப்பிரிவு கவுரவ விரிவுரையாளர் ஒருவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
அவர் ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், தொற்று பாதிப்பு உறுதியானது.
பின்னர் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து தடுப்பு நடவடிக்கையாக ஊட்டி அரசு கலைக்கல்லூரி மூடப்பட்டு, மாணவ-மாணவிகள் கல்லூரிக்கு வருகை தர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மாணவர் சேர்க்கை தொடர்பாக கவுரவ விரிவுரையாளர் கல்லூரிக்கு வந்து சென்றதால் உடன் பணியாற்றும் பேராசிரியர்களுக்கு கொரோனா பரவி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் என மொத்தம் 153 பேரிடம் இருந்து சுகாதார குழுவினர் மாதிரி சேகரித்து கொரோனா பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ஊட்டி அரசு கலைக் கல்லூரி முதல்வர் ஈஸ்வரமூர்த்தி கூறும்போது, கொரோனா பாதித்த கவுரவ விரிவுரையாளர் கடந்த 4 நாட்களாக கல்லூரிக்கு வரவில்லை. இருப்பினும் தடுப்பு நடவடிக்கையாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பரிசோதனை முடிவு வரும் வரை நேற்று, இன்று (புதன்கிழமை) மாணவ-மாணவிகளுக்கு இளங்கலை 2-ம் ஆண்டு, 3-ம் ஆண்டு, முதுகலை இரண்டாமாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகிறது என்றார். அங்கு பரவலை தடுக்க வணிகவியல் துறை வகுப்புகள், கல்லூரி வளாகம் என அனைத்துப் பகுதிகளிலும் நகராட்சி மூலம் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது.
ஊட்டி தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனால் தடுப்பு நடவடிக்கையாக பள்ளி மூடப்பட்டு உள்ளது. ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. அதேபோல் மஞ்சூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் 2 பேருக்கு தொற்று உறுதியானதை தொடர்ந்து, பள்ளி மூடப்பட்டது.