தம்பதியை கத்தியால் குத்தி மர்ம ஆசாமி ஒருவர் கொள்ளை முயற்சி

திருப்பூர் அருகே குன்னத்தூரில் அதிகாலையில் தம்பதியை கத்தியால் குத்தி மர்ம ஆசாமி ஒருவர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டார்.

Update: 2021-09-28 12:41 GMT
குன்னத்தூர்
திருப்பூர் அருகே குன்னத்தூரில் அதிகாலையில் தம்பதியை கத்தியால் குத்தி மர்ம ஆசாமி ஒருவர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
தம்பதி
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் இந்திரா நகரைச் சேர்ந்தவர் கே.ஆர்.சுப்பிரமணியம் வயது 61 இவர் குன்னத்தூரில் டிராக்டர் கம்பரசர் உதிரிபாகம் கடை நடத்தி வருகிறார்.‌ இவரது மனைவி மணிமேகலை 
இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். அவருக்கு திருமணமாகி  கணவருடன் வசித்து வருகிறார். இதனால் தம்பதி மட்டும் தனியாக வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தம்பதி இருவரும் வீட்டில் படுத்து தூங்கினர். அதிகாலை 4 மணியளவில் மின்தடை ஏற்பட்டுள்ளது. அப்போது வீட்டிற்கு வெளியே சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த சுப்பிரமணியம் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தார். 
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மர்ம ஆசாமி ஒருவன், திடீரென்று சுப்பிரமணியை வீட்டிற்குள் தள்ளிக்கொண்டு  சென்று கத்தியால் குத்த முயன்றுள்ளார். இதை சற்றும் எதிர்பராத சுப்பிரமணியம், அந்த ஆசாமி கத்தியால் குத்தவருவதை கையால் தடுத்துள்ளார். அப்போது சுப்பிரமணியத்தின் கழுத்தில் கத்திக்குத்து பட்டு ரத்தம் கொட்டியது.  இதனால் சுப்பிரமணியமும், அந்த ஆசாமியும் கட்டிப்பரண்டு சண்டை போட்டுள்ளனர். இதையடுத்து கணவரின் சத்தம் கேட்டு, மணிமேகலை எழுந்தார். அப்போது  மர்ம ஆசாமி ஒருவன் தனது கணவருடன் கத்தியுடன் சண்டை போடுவதையும், கணவரின் கழுத்தில் இருந்து ரத்தம் வருவதையும் பார்த்து அதிர்ச்சியடைந்து பக்கத்து வீட்டுக்காரர்களை உதவிக்கு அழைக்க வீட்டிற்குவெளியே வர முயன்றார். 
தாலிக்கயிறு பறிப்பு
அப்போது அந்த ஆசாமி மணிமேகலையை கீழே தள்ளி விட்டு,  வீட்டின் கதவை உள்பக்கமாக தாழிட்டார். பின்னர் மணிமேகலை அணிந்து இருந்த  5 பவுன்தங்க தாலிக்கொடியை பறிக்க முயன்றார். ஆனால் அந்த ஆசாமி கையில் தங்க தாலிக்கொடி சிக்க வில்லை. மணிமேகலை அணிந்து இருந்த தாலிக்கயிறு மட்டும் சிக்கியது. அந்த கயிற்றை  அந்த ஆசாமி தங்கத்தாலிக்கொடி என நினைத்து பறித்துக்கொண்டார். இதனால் பயந்து போன சுப்பிரமணியம், தனது மனைவியை அருகில் வரவேண்டாம், அடுத்த அறைக்கு சென்று வீடு என கூறினார். ஆனால் மணிமேகலை சாதுர்யமாக கதவை திறந்து கொண்டு வெளியே வந்து, திருடன், திருடன் என கூச்சல் போட்டார். 
இவருடைய குரல்கேட்டு பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் எழுந்து வந்தனர். அதற்குள் அந்த ஆசாமி  அருகில் இருந்த ஜன்னல் வழியாக குதித்து பக்கத்து வீட்டு மேல் மாடி வழியாக தப்பி சென்றுள்ளார். 
இந்த சம்பவம் குறித்து  குன்னத்தூர் போலீசில் சுப்பிரமணியம் புகார் செய்தார். உடனே போலீசார் சம்பவம் நடந்த வீட்டிற்கு வந்து விசாரணை செய்தனர். 
கண்காணிப்பு கேமரா பதிவு
 கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அந்த வீ்ட்டில் பதிவாகி இருந்த கை ரேகையை பதிவு செய்தனர்.  இந்த கொள்ளை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் கொள்ளையரின் உருவம் பதிவாகி இருந்தது. அந்த உருவத்தை வைத்து  போலீசார் விசாரித்து வருகிறார்கள். குன்னத்தூரில் தம்பதியை தாக்கி நகை மற்றும் பணம் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
---------

வடமாநில வாலிபர்
சுப்பிரமணியம் வீட்டிற்கு கொள்ளையடிக்க வந்த ஆசாமிக்கு  35 வயது இருக்கும் என்றும், அவருடைய முகம் வடமாநில வாலிபர் சாயலில் இருந்ததாகவும் போலீசாரிடம் சுப்பிமணியம் கூறியுள்ளார். மேலும் மணிமேகலை சாதுர்யமாக வெளியே வந்ததால் அவர் அணிந்து இருந்த 5 பவுன் தங்க தாலி தப்பியது. மேலும் வீட்டில் இருந்த நகை மற்றும் பணம் தப்பியது. 
------------------



மேலும் செய்திகள்