‘தினத்தந்தி’ புகார் பெட்டி

தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2021-09-27 21:10 GMT
ஆபத்தான பள்ளி கட்டிடம் 
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உங்கரானஅள்ளி ஊராட்சி உத்தனூர் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி கட்டிடத்தின் நிலை மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. எனவே ஆபத்தான நிலையில் உள்ள இந்த பள்ளிக்கட்டிடத்தை ஆய்வு செய்து புதிய கட்டிடம் கட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிருஷ்ணன், உத்தனூர், தர்மபுரி.

பழுதடைந்த குடிநீர் தொட்டி
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா டி.ஜி. தொட்டி கிராமத்தில் குடிநீர் நீர்த்தேக்க தொட்டி பழுதடைந்து காணப்படுகிறது. மேலும் இந்த தொட்டியை இடித்து புதிய குடிநீர் தொட்டி அமைத்து தர இது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த பலனும் இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு ஒரு நல்ல முடிவு எடுப்பார்களா?
-ஊர்மக்கள், கிருஷ்ணகிரி.

தாமதமாக நடக்கும் பணி
சேலம் சீலநாயக்கன்பட்டியில் இருந்து பழைய பஸ் நிலையம் செல்லும் வழித்தடத்தில் தாதகாப்பட்டி கேட் முதல் பில்லுக்கடை பஸ் நிலையம் வரையில் உள்ள சாலையில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக குழாய் பதிக்கு பணிகள் மிகவும் தாமதமாக நடைபெற்று வருகின்றன. எனவே அந்த பகுதியில் விரைவில் பணிகளை முடித்து சாலையை அமைத்து தர மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மணிகண்டன், சேலம்.

குடிநீர் குழாய் சரி செய்யப்படுமா? 
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள வீரகனூர் பேரூராட்சி 1-வது வார்டு வடக்கு தெருவில் 2 ஆண்டுகளுக்கு மேலாக குடிநீர் குழாய் பழுதடைந்து உள்ளது. இது சம்பந்தமாக அதிகாரியிடம் பலமுறை புகார் அளித்தும் கண்டுகொள்ளவில்லை. இதனால் தண்ணீர் இல்லாமல் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே விரைவில் குடிநீர் குழாயை சரி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-த.ரமேஷ், வீரகனூர், சேலம்.

மதுப்பிரியர்கள் அட்டகாசம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெரியசந்தையாக திகழும் போச்சம்பள்ளி சந்தையில் மதுப்பிரியர்கள் குடித்துவிட்டு தினமும் ரகளை செய்கிறார்கள். மேலும் அந்த வழியாக பள்ளி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள், பொதுமக்கள் முகம் சுழித்து செல்கின்றனர். இந்த பிரச்சினைக்கு போலீசார் தீர்வு காணவேன்டும்.
-த.சிவன், சமத்துவபுரம், கிருஷ்ணகிரி.

பொது நூலகம் வேண்டும்
சேலம் மாவட்டம் சன்னியாசிகுண்டு பகுதியில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் படிக்கும் ஆர்வத்தை அதிகரிக்கவும், நல்ல எண்ணங்களை வளர்க்கவும் பொது நூலகம் தேவை. எனவே இங்கு பொதுநூலகத்தை திறக்கவும், விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கே.மாறன், சன்னியாசிகுண்டு, சேலம்.

சேறும்-சகதியுமான நடைபாதை
தர்மபுரி மாவட்டம் உங்கரானஅள்ளி ஊராட்சி த.குளியனூரில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கு செல்ல வழியின்றி வயல்வரப்பில் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் நடந்து செல்லும் அவலநிலை உள்ளது. தற்போது பெய்து வரும் மழையில் நடைபாதை சேறும்-சகதியாக காணப்படுகிறது. இதற்கு விரைவில் தீர்வு கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்பொது மக்கள், த.குளியனூர், தர்மபுரி.

தரை மட்டத்தில் பொது கிணறு
சேலம் அழகாபுரம் பெரிய புதூர் சத்யாநகர் பகுதியில் பொது கிணறு உள்ளது. சுமார் 10 ஆண்டுகளாக இந்த கிணறு தரை மட்டத்தில் இருந்து ½ அடி உயரத்தில் மட்டுமே உள்ளது. இதனால் மழைக்காலங்களில் சாக்கடை கழிவுநீர் மழைநீருடன் கலந்து இந்த கிணற்றில் நிரம்பிவிடுகிறது. அந்த பகுதி குழந்தைகள் அதன் அருகே விளையாடுவதால் அச்சமாகவும் உள்ளது. எனவே கிணற்றை சுற்றி சுவர் எழுப்ப நடவடிக்கை எடுக்கப்படுமா?
-ஊர்மக்கள், பெரியபுதூர். சேலம்.

சாலையில் ஓடும் கழிவுநீர்
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா மெனசி கிராமத்தில் பெருமாள்கோவில் அருகில் சாக்கடை கழிவுநீர் சாலையில் ஆறுபோல் ஓடுகிறது. இதனால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வருவார்களா?
-ரவீந்திரன், மெனசி, தர்மபுரி.

பஸ் வசதி தேவை
எடப்பாடி அருகே உள்ள இருப்பாளி ஊராட்சியில் 3 ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊரின் வழியாக ஒரு பஸ் மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் அனைவரும் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே இந்த பகுதிக்கு கூடுதல் பஸ் வசதி செய்து தர வேண்டும்.
-ஏழுமலை, இருப்பாளி, சேலம்.

வேகத்தடை அமைக்கப்படுமா?
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே மோப்பிரிப்பட்டி சாலையில் புதிதாக போடப்பட்ட சாலையில் குறுகிய வளைவு உள்ளது. இந்த வளைவில் வாகன ஓட்டிகள் அதிவேகமாக வந்து கீழே விழுந்து விபத்துகளில் சிக்குகின்றனர். இதனால் இந்த வழியாக மாலை நேரங்களில் நடந்து செல்வோர் மிகவும் பயப்படுகிறார்கள். எனவே புதிய சாலையில் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எம்.சுந்தரமூர்த்தி, மோப்பிரிப்பட்டி, தர்மபுரி.

மேலும் செய்திகள்