மின்சார மீட்டரில் தீப்பிடித்தது
பட்டுக்கோட்டையில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மின்சார மீட்டரில் தீப்பிடித்தது. இதனால் புகை மூட்டம் ஏற்பட்டு வீடுகளில் இருந்தவர்கள் வெளியே ஓடி வந்தனர்.
பட்டுக்கோட்டை;
பட்டுக்கோட்டையில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மின்சார மீட்டரில் தீப்பிடித்தது. இதனால் புகை மூட்டம் ஏற்பட்டு வீடுகளில் இருந்தவர்கள் வெளியே ஓடி வந்தனர்.
தீப்பிடித்தது
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை லட்சத்தோப்பு பகுதியில் பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளது. அதில் 12 வீடுகள் கொண்ட" டி" பிளாக்கில் உள்ள மின்சார மீட்டர் பெட்டியில் நேற்று முன்தினம் இரவு 12.30 மணி அளவில் திடீரென்று தீப்பிடித்து வயர் எரிந்து கரும்புகை சூழ்ந்தது. இந்த தீ மளமளவென அங்கு இருந்த 3 வீடுகளுக்கும் பரவியது. இதனால் அந்த வீடுகளில் இருந்த பெரியவர்கள், குழந்தைகள் மூச்சுத்திணறி அவதிப்பட்டனர். சிலர் அலறி அடித்துக் கொண்டு வீட்டுக்கு வெளியிலும், மாடிக்கும் ஓடினர்.
12 வீடுகள் தப்பின
இது குறித்து பட்டுக்கோட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் பட்டுக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்டர் பெட்டியை அகற்றி தீ பரவாமல் அணைத்தனர். இதனால் "டி"பிளாக்கில் உள்ள 12 வீடுகளும் தப்பின. மீட்டர் பெட்டியில் எப்படி தீப்பிடித்தது? என தெரியவில்லை. தீ அணைக்கப்பட்ட பிறகு வீடுகளில் குடியிருந்தவர்கள் நிம்மதி அடைந்தனர்.