சேலத்திற்கு நாளை வருகை: வருமுன் காப்போம் மருத்துவ திட்டத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் வாழப்பாடி, ஆத்தூரில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

சேலத்திற்கு நாளை வருகை தரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், வாழப்பாடியில் நடக்கும் விழாவில் வருமுன் காப்போம் மருத்துவ திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இதையொட்டி வாழப்பாடி மற்றும் ஆத்தூரில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடக்கின்றன.;

Update: 2021-09-27 20:47 GMT
சேலம்,
மு.க.ஸ்டாலின் வருகை
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (புதன்கிழமை) முதல் 2 நாட்கள் சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதற்காக அவர் நாளை காலை 9 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு சேலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு வருகிறார். 
அங்கு முதல்-அமைச்சருக்கு தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் வரவேற்பு அளிக்கிறார்கள்.
வருமுன் காப்போம் திட்டம்
இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கார் மூலம் சேலத்தில் இருந்து வாழப்பாடிக்கு செல்கிறார். அங்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள வருமுன் காப்போம் மருத்துவ திட்டத்தை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றுகிறார். வாழப்பாடியில் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சியினர் கலந்து கொள்கின்றனர். 
பின்னர் ஆத்தூர் செல்லும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தென்னங்குடிபாளையம் ஊராட்சியில் புறவழிச்சாலை பகுதியில் ரூ.2 கோடியே 84 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தை திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.
கலந்துரையாடல்
அதைத்தொடர்ந்து ஆத்தூரில் இருந்து பைத்தூர் செல்லும் வழியில் முத்துலிங்கம் கவுண்டருக்கு சொந்தமான பழனி ஆண்டவர் சேகோ ஆலையில் ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச் மாவு தயாரிக்கும் பணிகளை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். மேலும், அங்கு சேகோ சர்வ் ஆலை உரிமையாளர்களுடன் கலந்துரையாடுகிறார். 
இந்த கூட்டத்தில், சேகோசர்வ் ஆலை உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்து ஆலோசனை நடத்துகிறார். அதைத்தொடர்ந்து சேலம் திரும்பும் முதல்-அமைச்சர் கருப்பூர் பகுதியில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.
கலெக்டர் ஆய்வு
இந்த நிலையில், வாழப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடக்கும் வருமுன் காப்போம் மருத்துவ திட்ட தொடக்க விழாவுக்கான ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் கார்மேகம், மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆகியோர் நேற்று அங்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதனிடையே, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழப்பாடி மற்றும் ஆத்தூர் வருகையை முன்னிட்டு விழா நடக்கும் முன்னேற்பாடு பணிகளையும், பாதுகாப்பு குறித்தும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
அப்போது, சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் உடனிருந்தார். மேலும், முன்னாள் எம்.எல்.ஏ. சின்னதுரை, மாவட்ட தி.மு.க. நெசவாளர் அணி அமைப்பாளர் ஆறுமுகம், ஆத்தூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் டாக்டர் செழியன், ஆத்தூர் நகர செயலாளர் பாலசுப்பிரமணியம், நரசிங்கபுரம் நகர செயலாளர் வேல்முருகன் உள்பட தி.மு.க. நிர்வாகிகளும் உடன் சென்றனர்.
சேலம் மாவட்டத்தில் நாளை நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முடித்துவிட்டு தர்மபுரி செல்கிறார். அங்கு இரவில் தனியார் ஓட்டலில் தங்குகிறார். பின்னர் அவர் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) தர்மபுரியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

மேலும் செய்திகள்