ெரயில்- பஸ் மறியலில் ஈடுபட்ட 1,030 பேர் கைது

விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ரெயில் மற்றும் பஸ் மறியலில் ஈடுபட்ட 1,030 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-09-27 20:07 GMT
விருதுநகர், 
விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ரெயில் மற்றும் பஸ் மறியலில் ஈடுபட்ட 1,030 பேரை போலீசார் கைது செய்தனர். 
 மறியல் போராட்டம்
மத்திய அரசு வேளாண் திருத்த சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும், விவசாயிகளுக்கு வழங்கி வந்த இலவச மின்சாரத்தை பறிக்கும் மின்சார திருத்த சட்டத்தை ரத்து செய்ய கோரியும், தொழிலாளர்களுக்கான 44 சட்டங்களை நான்கு தொகுப்புகளாக மாற்றிய சட்டத்தை ரத்து செய்ய கோரியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில்  நேற்று நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என பல்வேறு அரசியல் கட்சியினரும், விவசாய சங்க அமைப்பினரும் அறிவித்திருந்தனர்.
 இதையொட்டி விருதுநகர் மாவட்டத்தில் நேற்று விருதுநகர் ெரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் செய்வதற்கு இடதுசாரி கட்சியினர், விவசாய சங்கத்தினர் திரண்டனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். ெரயில் நிலையம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய சங்க இணை செயலாளர் பிஜுகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
130 பேர் கைது 
 இதனை தொடர்ந்து தமிழ் விவசாயிகள் சங்க தலைவர் நாராயணசாமி தலைமையில்ரெயில் போராட்டத்திற்கு முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில குழு உறுப்பினர் பாலசுப்ரமணியம், இந்திய கம்யூனிஸ்டு் கட்சி மாநில குழு உறுப்பினர் பாலமுருகன், மாநில ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க உறுப்பினர் முருகேசன், விவசாய சங்க மாவட்ட தலைவர் முருகன் உள்பட 130 பேரை கைது செய்தனர்.
மாவட்டம் முழுவதும் கோரிக்கைகளை வலியுறுத்தி 17 இடங்களில் பஸ் மறியல் போராட்டம் நடைபெற்றது. சேத்தூர், சாத்தூர், திருத்தங்கல், அருப்புக்கோட்டை, ஏழாயிரம்பண்ணை, மல்லாங்கிணறு, மம்சாபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர், கீழராஜகுலராமன், காரியாபட்டி, சிவகாசி, திருச்சுழி, வத்திராயிருப்பு, ஆலங்குளம் ராஜபாளையம் உள்ளிட்ட 17 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
பாதிப்பு இல்லை 
 சேத்தூரில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான லிங்கம் கலந்து கொண்டார். வத்திராயிருப்பில் நடந்த மறியல் போராட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.வும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு உறுப்பினருமான ராமசாமி கலந்து கொண்டார்.
 சாத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் விஜயகுமார் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் விஜய முருகன் கலந்து கொண்டார். இந்த மறியல் போராட்டங்களில் ஈடுபட்ட 200 பெண்கள் உட்பட 900 பேர் கைது செய்யப்பட்டனர். 
 வேலை நிறுத்த போராட்டத்தால் மாவட்டத்தில் எந்தவித பாதிப்பும் இல்லை. எனினும் அரசு பஸ்களும், தனியார் பஸ்களும், ஆட்டோக்களும் வழக்கம் போல் ஓடின. வத்திராயிருப்பை தவிர மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் கடைகள் வழக்கம் போல் திறந்திருந்தன. வத்திராயிருப்பில் மட்டும் 20 கடைகள் மட்டும் அடைக்கப்பட்டிருந்தன. மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்பட்டன. மொத்தத்தில் போராட்டத்தினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

மேலும் செய்திகள்