‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கும் சாலை
திருச்சி மேலகல்கண்டார்கோட்டை, மாருதி நகர், 5-வது தெருவில் சிறிது நேரம் பெய்யும் மழைக்கே தாக்குப்பிடிக்காமல் குளம்போல் காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் முதியவர்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சரண், திருச்சி.
சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் மழைநீர்
திருச்சி, கிராப்பட்டி ரெயில்வே மேம்பாலம் அருகே உள்ள சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கி நிற்பதால் அந்த பகுதி சேறும்சகதியுமாக காட்சியளிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரபா, திருச்சி.
வாகன ஓட்டிகள் அவதி
திருச்சி மாவட்டம், காட்டூர் மஞ்சத்திடல் பாலம் முதல் ரெயில்வே கேட் வரை சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். மேலும் சாலையின் இருபுறத்திலும் கருவேல மரங்கள் நிறைந்துள்ளது. தெருவிளக்கு வசதி இல்லாததால் இரவு நேரங்களில் அந்த வழியே செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காட்டூர், திருச்சி.
நெல்கொள்முதல் நிலையம் அமைக்கப்படுமா?
திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகாவில் சுமார் 2,100 ஏக்கரில் விவசாயம் நடைபெற்று வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இப்பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்.
முத்துகுமார், திருச்சி.
சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள்
ஸ்ரீரங்கம் சாலைரோடு (மேலூர் ரோடு) முதல் வண்ணத்துப்பூச்சி பூங்கா வரை உள்ள ரோட்டில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் சகஜமாக சாலையில் சுற்றி திரிகின்றன. இதனால் வாகனங்களில் செல்பவர்களும், நடந்து செல்பவர்களும் மிகவும் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி நிர்வாகம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், ஸ்ரீரங்கம்.
ஆக்கிரமிப்பு அகற்ற கோரிக்கை
திருச்சி மாநகராட்சி வார்டு எண் 53, உய்யக்கொண்டான் திருமலை கொடப்பு மெயின் ரோட்டில் கல்லாங்காடு தெரு முனையில் சிலர் ரோட்டை ஆக்கிரமித்து உள்ளனர். இதனால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் இதனை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முருகேசன், திருச்சி.
கிடப்பில் போடப்பட்ட சாலை பணி
திருச்சி மாவட்டம் மருங்காபுரி தாலுகா, கல்லுப்பட்டியில் திருச்சி- மதுரை நெடுஞ்சாலையில் இருந்து அங்கன்வாடி குடியிருப்பு பகுதிவரையிலான 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு தார்சாலை அமைக்கும் பணி கடந்த ஒரு ஆண்டிற்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த சாலை பணியை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
கல்லைவெங்கட், திருச்சி
குடிநீர் குழாயில் உடைப்பு
திருச்சி தென்னூர் சாலையில் உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் கடந்த 3 மாதங்களாக குடிநீர் வீணாக செல்கிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பல முறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் முன்வர வேண்டும்.
பொதுமக்கள், திருச்சி.
சேறும், சகதியுமான சாலை
திருச்சி 36-வது வட்டம் கொட்டப்பட்டு ஜீவா பிரதான சாலையில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவில் சேறும் சகதியுமாக உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் இந்த தெருவில் முழுவதும் மழைநீர் தேங்கியுள்ளது, மேலும் வாகன ஓட்டிகள் இந்த சாலையை பயன்படுத்த முடியாத அவல நிலையில் உள்ளது, எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாண்டியன், திருச்சி.